மேற்கு வங்கத் தேர்தலில் கூச் பெஹரில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே, சிஐஎஸ்எஃப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 4 பேரை ‘கெட்ட பசங்க’என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறினார். இது அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஆத்திரத்தை தூண்டியுள்ளது. இதற்கு அடுத்த நாள், அம்மாநிலத்தின் மற்றொரு பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, ஒரு படி மேலே போய், “பாதுகாப்பு படையினர் 4 பேருக்கு பதிலாக 8 பேரைக் கொன்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.
“சிதல்குச்சியில் 4 பேரை இல்ல, 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். மத்திய பாதுகாப்பு படையினருர் ஏன் 8 பேரை சுட்டுக்கொல்லாமல் 4 பேரைக் கொன்றார்கள் என்று விளக்கம் கேட்டு அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். குண்டர்கள் மக்களுடைய ஜனநாயக உரிமையைப் பறிக்க முயற்சி செய்கிறார்கள். மத்திய படையினர் தக்க முறையில் பதிலடி கொடுத்துள்ளனர். அதுபோல, மீண்டும் நடந்தால் அவர்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்” என்று சின்ஹா பேசினார்.
ராகுல் சின்ஹா தனது ஹப்ரா தொகுதியில் பிராசாரத்தின்போது ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் வன்முறை சம்பவத்தில் வாக்குப்பதிவு அன்று நடந்த 5வது மரணத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டிய அவர், “பாஜகவை ஆதரித்ததற்காக ஒரு வாக்குச் சாவடியில் 18 வயது சிறுவன் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டான். மம்தா பானர்ஜி அவர்களுடைய தலைவர்” என்று கூறினார்.
திலீப் கோஷ் மற்றும் ராகுல் சின்ஹா ஆகிய இருவரின் வெறுப்பைத் தூண்டும் ஆத்திரமூட்டும் கருத்துகளுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தது. மேலும், அவர்கள் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாகத் தெரிவித்தனர்.
இந்த 2 தலைவர்களுக்கு எதிராக குற்றப்பிரிவுகளில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும், அடுத்த கட்ட தேர்தல்களில் அவர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
சின்ஹாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர்களுடைய தலைவர்கள் 4 பேரை இல்ல, 8 பேரை கொன்றிருக்க வேண்டும் என்று கூறினார்கள். இவர்களா நம் நாட்டின் தலைவர்கள்.” என்று சாடினார்.
“பா.ஜ.க.வை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில அமைச்சருமான ஜோதிப்ரியா மல்லிக் கூறினார்.
மேற்கு வங்கத்தில் 4வது கட்ட வாக்குப்பதிவின்போது, சிதல்குச்சியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வெளியே தங்கள் ஆயுதங்களை பறிக்க முயன்ற ஒரு கும்பல் மீது சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 4 பேர் கொல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.
சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களால் ஒரு சிறுவன் தாக்கப்பட்டதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் வாக்குச்சாவடியில் நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர். உண்மையில், அந்த சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் கீழே விழுந்ததாகவும் அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் ஜொர்பட்கி கிராமத்தைச் சேர்ந்த ஹமீதுல் மியான் (31), மோனிருஜ்ஜமான் மியான் (28), நூர் ஆலம் மியான் (20), சாமியுல் ஹக் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களை ‘டஸ்டு செலெரா’ (கெட்ட பசங்க) என்று பாஜக மாநிலத் தலைவர் கோஷ் கூறினார். அவர்கள் அப்படி செய்யாவிட்டால்,இதே போன்ற சம்பவங்கள் நடக்கும் என்று கூறினார்.
சிதல்குச்சியில் நடந்த மற்றொரு தனி சம்பவத்தில், முதல் முறையாக வாக்களித்த ஆனந்த் பர்மன் (18) பதந்தூலியில் வாக்களிக்க வரிசையில் நின்றபோது சமூகக் குற்றவாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.