தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக, தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் வழக்கம் போல, தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக - அதிமுக இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிதான் நேரெதிர் போட்டி கட்சிகளாக தேர்தலை சந்தித்துள்ளன. ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டபடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே பூசல் நிலவியதால், பல கட்ட ஆல்லோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகே தற்போதைய முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கூட்டணியில் இருந்த தேசியக் கட்சியான பாஜகவும் தேர்தல் நெருக்கத்தில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொண்டது.
தமிழக அரசியலில் வழக்கம் போல இந்த தேர்தலிலும் இருதுருவ ஆளுமைகள் முதல்வர் வேட்பாளர்களாக தேர்தலை சந்திக்க வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக பொழிந்து வந்த விமர்சனங்களும் ஓய்ந்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இ.வி.எம் இயந்திரங்களை அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர். ஏதேனும், வழக்கத்திற்கு மாறாக பெரிய வாகன நடமாட்டங்கள் இருந்தாலோ அல்லது சிசிடிவி கேமிரா பதிவு தற்செயலாக நின்றுபோனாலோ அடையாள அட்டை இல்லாத நபர்கள் உள்ளே நுழைய முயன்றாலோ உடனடியாக புகார் தெரிவித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். இவர்களின் கண்காணிப்பு பார்வையில் அவ்வப்போது வருகிற தண்ணீர் லாரி வாகனங்களும் இவர்களின் ஆட்சேபனைக்கு தப்புவதில்லை.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே சூறாவளி பிரசாரப் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு முடிந்ததும் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து வருகிறார். கொடைக்கானலில் ஓய்வெடுப்பதோடு மட்டுமில்லாமல், திமுகவுக்கு தேர்தல் பிரசார உத்தி வகுத்து தந்த பிரசாந்த் கிஷோரும் திமுக தலைவர்களும் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்று உறுதியாக கூறியதால் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதற்கும் ஒருபடி மேலே சென்று, திமுக வெற்றி பெற்றால் இப்போதே தனது அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்ற பட்டியலையும் தயார் செய்து வருகிறார். திமுகவில் முக்கிய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே போல, அதிமுகவின் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் குறித்து முதலில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தாலும் தற்போது ஊடகங்களில்கூட அவருடைய பேச்சிலும் தோற்றத்திலும் ஒரு தளர்வு இருப்பதைக் காண முடிகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பிறகு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து வெளியேற்றியதோடு, ஓ.பி.எஸ்-ஐ கட்சிக்குள் கொண்டுவந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்து அந்த தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பெரும்பாண்மையுடன் ஆட்சியை தக்கவைத்து 4 ஆண்டுகள் முதல்வராக ஆட்சியை நிறைவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தல் தன்னை நிரூபிப்பதற்கான தேர்தலாக அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, தனது அரசு நிர்வாகம் சரியாக செயல்பட்டுள்ளது என்ற நம்பிக்கையிலும் 10.5% வன்னியர் உள் இடதுக்கீடு ஆகியவை தனக்கு தேர்தலில் பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
அதிமுக அமைச்சர்கள் பலரும் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு திமுக பிரசாரம் செய்ய தொடங்கிய அதே கால கடத்தில் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கினார்கள் என்று கூறலாம். அதிமுகவில் குறைந்த பட்சம் அனைத்து அமைச்சர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குரலில் வாக்குப்பதிவுக்கு முன்பு
இருந்த தோரனை, ஆவேசம், இப்போது இல்லை என்றே சொல்லலாம். எடப்பாடி பழனிசாமி தேர்தல் முடிவு குறித்து நம்பிக்கை இழந்து வருவதாகவேத் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்தாலும், ஒருவேளை அதிமுக தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தால் அதிமுக எதிர்க்கட்சி நிலைக்கு தள்ளப்பட்டால் யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார்கள் என்ற விவாதம் அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் விவாதங்கள் எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தற்போது வரை அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாகத்தான் இருந்து வருகிறது. அதிமுகவில் இப்போது ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைபாளராகவும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். அதிமுகவை தற்போது ஒரு கூட்டு தலைமைதான் வழிநடத்தி வருகிறது. அதனால், ஒருவேளை அதிமுக எதிர்க்கட்சி நிலைக்கு சென்றால் யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி அல்லது ஓ.பன்னீர் செல்வம் இவர்களில் ஒருவர்தான் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார்கள். ஆனால், அது தேர்தலுக்குப் பிறகு, கட்சியில் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்தான் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கப்பட்டபோதே அதிமுகவில் அவருடைய பிடி உறுதியாகி விட்டது. ஓ.பன்னீர் செல்வமும் கட்சியில் நிலவிய யதார்த்தத்தை அறிந்தே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக அறிவித்தார். இந்த சூழல் தேர்தலில் அதிமுக எதிர்கட்சி நிலைக்கு தள்ளப்பட்டால் தொடருமா என்படு கேள்விக்குறிதான்.
ஓ.பன்னீர் செல்வம் பெரும்பாலும் தென் மாவட்ட எம்.எல்.ஏ-க்களை தனக்கு ஆதரவாகக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளதாக கூறுகின்றனர். அதனால், அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து போட்டி எழும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
மற்றொரு அதிமுக வட்டாரம் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே பல தென் மாவட்ட எம்.எல்.ஏ.க்களையும் அமைச்சர்களையும் தனது ஆதரவாளர்களாக உறுதியாக்கி வைத்திருக்கிறார். அதனால், அவரே எதிர்க்கட்சி தலைவராக தொடர்வார் என்று தெரிவிக்கின்றனர்.
எப்படியானாலும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, அமைய உள்ள சட்டப்பேரவையில் அதிமுக ஆளும் கட்சியாக தொடருமா? அல்லது எதிர்க்கட்சியாக அமையுமா? அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர் செல்வமா? என்பது தெரியவரும். அதுவரை எல்லாம் விவாதங்களாகவும் யூகங்களாகவும் இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.