மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசன் முதல்முறையாக தேர்தலில் களம் காணுகிறார். அவர் சென்னையில் உள்ள ஆலந்தூர் அல்லது மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், அவர அதற்கு முற்றிலும் மாறாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் அரியல் நோக்கர்களுக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோவை தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பலம் என்ன? கோவை தெற்கு தொகுதி எந்த கட்சியின் கோட்டையாக இருக்கிறது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கமல்ஹாசன் கொவை தெற்கு தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் வெளிச்சமாகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போது கோவை தெற்கு தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொகுதி 2007ம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது அதுவரை கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்தநிலையில், கோவை தெற்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வேலுச்சாமி போட்டியிட்டு 80,637 வாக்குகள் பெற்று 27,796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கந்தசாமி 52,841 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்மன் கே.அர்ஜுணன் 59,788 வாக்குகள் பெற்று 17,419 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயகுமார் 42,319 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதி கோவை மேற்கு தொகுதியாக இருந்தபோது அதிமுகவைச் சேர்ந்த டி.மலரவன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. தொகுதிமறு சீரமைப்புக்கு முன்பு திமுக 3 முறையும் காங்கிரஸ் கட்சி 3 முறையும் இந்திய பொதுவுடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால், கோவை தெற்கு தொகுதி அதிக முறை வெற்றிகொண்ட அதிமுக அத்தொகுதியை தனது கோட்டையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்முறையாக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் போட்டியிட்டார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், 5,71,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் மொத்தம் பதிவான வாக்குகளில் 45.66% வாகுக்களைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் இராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளுடன் 31.34% வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இவரையடுத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்று அதாவது 11.6% வாக்குகளைப் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.
இந்த பி.ஆர்.மகேந்திரன்தான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கமல்ஹாசனிடம் அடம்பிடித்து அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3.94% வாக்குகளைப் பெற்றது. இதில் அக்கட்சி நகர்புறங்களில் மட்டும் கிட்டத்தட்ட 10% சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், கோவை தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒட்டுமொத்தமாக 11.6% வாக்குகளைப் பெற்றுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் நேரடியாக மோதுகின்றன. காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மநீம அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதால் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையை விடுத்து கோவை தெர்கு தொகுதியில் துணிந்து களம் இறங்கியிருக்கிறார்.
அதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “கொங்கு ஊழல் கோட்டையாக உள்ளது. சோகம் அளிக்கிறது. அதனால்தான், அங்கு போட்டியிடுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.