ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருடைய ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன சுயேட்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளும் அதிமுகவையும் எதிர்கட்சியான திமுகவை அதிரவைத்தார்.
அதனால், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் மீண்டும் அதே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவாரா? அல்லது ஜெயலலிதா போட்டியிட்ட மற்றொரு தொகுதியான ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. டிடிவி தினகரன் தேன்’ஈ மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்து பின்னர், சூழ்நிலையால் கசந்து கடலைமிட்டாய்க்கு பேர்போன தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அமமுக இந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, எஸ்.டி.பிஐ, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல், அதோடு, திமுக, அதிமுக, மநீம ஆகிய 3 அணிகளைத் தவிர 4வது அணியாக அமமுக தலைமயிலான அணியும் உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பதன் மூலமே டிடிவி தினகரன் அதிமுகவை மீட்பது சாத்தியமா என்பதையும் வெளிப்படுத்த முடியும்.
அதனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த மாதம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதனால், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
டிடிவி தினகரன் எம்.பி.யாக இருந்தபோது தேனி மாவட்டத்திற்கு பலமுறை சென்றுவந்ததன் மூலம் இந்த தொகுதி மக்களிடையே அவருக்கு நல்ல அறிமுகமும் உள்ளது. அதனால், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவது என்பது டிடிவி தினகரனின் முதல் விருப்பமாக இருந்தது.
அதே நேரத்தில், தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் செல்வாக்கு உள்ளது அதோடு, அமமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் செல்வாக்கு உள்ளது. இதனால், டிடிவி தினகரன் இந்த 2பேர்களின் நெருக்கடியைத் தாண்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது கடினமானது என்பதால், டிடிவி தினகரன் ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் முடிவை மாற்றிக்கொண்டார்.
வேறு எங்கே போட்டியிடுவது என்று தொகுதிகளைத் தேர்வு செய்யத் தொடங்கிய டிடிவி தினகரன், சட்டமன்றத் தேர்தலில் மேலும் தெற்கே சென்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தேன்’ஈ மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்த டிடிவி தினகரன், அங்கே நிலவும் சூழ்நிலையால், தனது முடிவை மாற்றிக்கொண்டு கடலை மிட்டாய்க்கு பேர் போன கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.
கடலை மிட்டாய்க்கு பெயர்பெற்ற கோவில்பட்டி தொகுதி தேர்தல் முடிவு டிடிவி தினகரனுக்கு இனிக்குமா? என்பது கோவில்பட்டி வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.