உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரத்தில் ஈடுபட தடை! - தேர்தல் ஆணையம் அதிரடி

யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோருக்கு பிரச்சாரம் செய்ய தடை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரச்சனையே இந்த பிரச்சாரத்தில் தான்.

கடந்த ஏப்ரல் 7, 9 ஆகிய தேதிகளில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில், ஏப்ரல் 7ம் தேதி பிரச்சாரத்தில் முழங்கிய மாயாவதி, “முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்’ என பேசினார்.

இதைத் தொடர்ந்து மாயாவதிக்கு பதிலடி கொடுக்க, மீரட்டில் நடந்த பிரச்சாரத்தில் ஏப்ரல் 9ம் தேதி பேசிய யோகி ஆதித்யநாத், “ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது’ என பேசினார்.

தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, ஏப்ரல் 16 காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், மாயாவதி ஏப்ரல் 16 காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தல், பத்திரிக்கை செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும் இந்த தடை பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Election news in Tamil.

×Close
×Close