/indian-express-tamil/media/media_files/2025/03/13/WyaF9OEA4FS21tgIU4La.jpg)
ஸ்வீட் ஹார்ட், பெருசு, ராபர், வருணன், மாடன் கொடை விழா, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாகின்றன. ரஜினி முருகன், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி:
2004ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்தார் படத்தில் இடம் பெற்ற பாடலகள் அனைத்தும் ஹிட்டானது. கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும். இத்திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படத்தை மீண்டும் இன்று ரிலீஸ் செய்கின்றனர்.
ரஜினிமுருகன்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான 'ரஜினிமுருகன்' திரைப்படம் மீண்டும் இன்று திரைகளில் வெளியிடப்படவுள்ளது. கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின.
ஸ்வீட் ஹார்ட்:
அறிமுக இயக்குனர் ஸ்வினீத் சுகுமார் எழுதி இயக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் இப்படம் இன்று வெளியாகிறது.
பெருசு:
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் தயாரிப்பில் 16வது படமாக 'பெருசு' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இறுதிச் சடங்கு சம்பந்தமான கதைக் களத்தில் காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது.
ராபர்:
எஸ்.எம்.பாண்டி இயக்கி இருக்கும் ராபர் படத்திற்கு'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே 'ராபர்'படத்தின் கதை.
வருணன்:
கேப்ரியல்லா, துஷ்யந்த் ஜெயபிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். ஜெயவேல்முருகன் இயக்கியுள்ள படத்தில் ராதா ரவி, சரண்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாடன் கொடை விழா:
ஆர்.தங்கபாண்டி இயக்கத்தில் கோகுல் கவுதம், ஷருமிஷா, சூர்ய நாராயணன் மற்றும் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மாடன் கொடை விழா'. சிவப்பிரகாசம் தயாரிக்க விபின் ஆர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்:
கே.ரங்கராஜ் இயக்கத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ள "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" படம் இன்று வெளியாகிறது. 2வது நாயகனாக பரதனும் இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேலும் நடித்துள்ளனர். மேலும், பார்கவ் , கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
குற்றம் குறை:
எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை தான் "குற்றம் குறை ". லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
டெக்ஸ்டர்:
தமிழ், மலையாளத்தில் 'டெக்ஸ்டர்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜு கோவிந்த், நாயகியாக யுக்தா பிரேமி நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூரியன் ஜி இயக்கி உள்ளார். இப்படம் பிரபல ஹாலிவுட் கிரைம் திரில்லர் வெப் தொடரான டெக்ஸ்டரின் தொடர்ச்சி என்று இயக்குனர் சூரியன் கூறி இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.