சூப்பர் ஸ்டார் ரஜினி - பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெற்றி பெற்ற 2.0 திரைப்படம் புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோல்டன் ரீல் விருது :
நடிகர் ரஜினி, நடிகை எமி ஜாக்ஷன், அக்ஷய் குமார் ஆகியோ நடிப்பிலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும், லைகா நிறுவன தயாரிப்பிலும் உருவான ‘2.0’ படம், மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது.
சுமார் 850 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம், வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இத்தனை பெரிய தொகையை செலவு செய்து இந்தியாவில் யாரும் படம் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பிரம்மாண்ட படங்களான ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’யும் தாண்டி, அதிக அளவில் செலவு செய்யப்பட்ட படம் ‘2.0’.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/DNDHgNgUMAE_Sbq.jpg)
இத்தனை தூரம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வெற்றியடைந்த அந்தப் படம், அடுத்தடுத்த சாதனைகளையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவர் ரசூல் பூக்குட்டி. அவர், தன்னுடைய திறமை முழுவதையும் 2.0வில் இறக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, உலக அளவிலான படங்களின் சிறப்பு சத்தத்துக்காக, ‘Motion pictures sound Editors org’ என்ற நிறுவனம், 66வது கோல்டன் ரீல் அவார்ட்ஸுக்கான தேர்வு பட்டியலில், ‘2,0’ படத்தையும் சேர்த்துள்ளது.
‘2.0’ படத்தில் குருவிகள் இறப்பது போன்ற காட்சி அமைப்புகள் உள்ளன. அந்த காட்சிகளின் போது, ரசூல் பூக்குட்டியின் ஒலித் தேர்வு மற்றும் சிறப்பு சப்தம் எல்லாம் ஈடு இணையற்றவையாக இருப்பதாக, உலக அளவிலான சவுண்ட் இன் ஜினியர்களால் பாராட்டப்படுகிறது.
இப்படிப்பட்ட சிறப்பு சப்தங்களுக்காகவே, உலக அளவிலான விருது பட்டியலில் ‘2.0’ சேர்க்கப்பட்டிருக்கிறது. பட்டியலில் இருக்கும் ‘2.0’, தேர்வு பெற்றும் முதல் இடத்துக்கு வந்து விருதைப் பெற வேண்டும் என, பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதை அறிந்த திரையுலக பிரபலங்கள், இப்போதே ‘2.0’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.