சென்னையில் நடிகை நயன்தாரா, மற்றும் சென்னை காவல்துறை ஆணையர், உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் விலை உயர்ந்த நடிகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஆர்.சி நகர், சத்ய தேவ் அவன்யூ பகுதியில் அமைந்துள்ள சிபுரோஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், நடிகை நயன்தாரா, சென்னை காவல் ஆணையர், சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் கோபாலகிருஷ்ணன் என்ற பங்குச்சந்தை வர்த்தகரும் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் விலை உயர்ந்த நகைகள், ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை லாக்கரில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.
இதனிடையே, நேற்று இவர் இந்த லாக்கரில் இருந்து பணத்தை எடுக்க லாக்கரின் சாவியை தேடியபோது சாவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர், லாக்கரை திறக்கும் நிபுணர்கள் மூலம் லாக்கரை திறந்தபோது கோபாலகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக்கரில் வைத்திருந்த 250 சவரண் நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான கோபாலகிருஷ்ணன், இது குறித்து உடனடியாக பட்டினப்பாக்கம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கோபாகிருஷ்ணனிடம், கடந்த 10 ஆண்டுகளாக டிரைவர் வேலையில் இருந்து சமீபத்தில் வேலையில் இருந்து நின்றுவிட்ட அசோக் நகரை சேர்ந்த சரவணன் என்பர் மீது சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிரைவர் சரவணன் மீது சந்தேகம் இருந்ததால், கோபாலகிருஷ்ணன் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“