சென்னையில் ஒரு மாலில் ஒரே நாளில் 94 காட்சிகளாம்! அலற விடும் 2.O கலெக்‌ஷன்

Rajinikanth's 2.O Box Office Collection: ஒரு தமிழ் படம் உலகளாவிய சாதனையை எட்டுகிற விதமாக 2.0 -வின் வசூல் இருக்கும் என்பது திரை...

Box Office Collection Record Of 2.O: ரஜினிகாந்த்-ஷங்கர்-அக்‌ஷய் குமார்-லைகா என மெகா கூட்டணியில் வெளியான 2.0 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் திரையுலகினரை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் வெர்ஷன் மட்டும் முதல் வார இறுதியில் 350 கோடி முதல் 380 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து லைகா வட்டாரங்களில் கூறப்படும் புள்ளிவிவரங்களை பார்ப்போம். முதல் நாள் வசூல் தமிழ்நாடு 38.7 கோடி, ஆந்திரா 5.6 கோடி, கர்நாடகா 5.1 கோடி, கேரளா 12 கோடி, மும்பை தமிழ் வெர்ஷன் 98 லட்சம், மஹாராஷ்ட்ரா முழுவதும் 75 லட்சம் உள்பட முதல் நாள் இந்தியா முழுவதும் தமிழ்வெர்ஷன் 61.87 கோடி வசூலித்ததாக கூறுகிறார்கள்.

தெலுங்கு வெர்ஷன் இந்தியா முழுவதும் 19.5கோடி, ஹிந்தி வெர்ஷன் இந்தியா முழுவதும் 27கோடி என மொத்தம் 108.37 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. ஓவர்சீஸ் மார்கெட் நிலவரப்படி மலேசியா, சிங்கப்பூர் இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ் உட்பட 2 கோடி, பாகிஸ்தான், யூஏஇ, கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் 6 கோடி, ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மொத்தம் 17 இடங்களில் சேர்த்து 11 கோடி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்விஸ் சேர்த்து 2.6 கோடி, தென் ஆப்ரிக்காவில் 1.1 கோடி( சந்திரமுகியிலிருந்து தொடர்ந்து அங்கு ரஜினி படங்கள் நல்ல வசூலை காட்டுகின்றன), ரஷ்யா 98 லட்சம் என வசூல் செய்திருக்கிறது 2.0 .

தென் அமெரிக்க நாடுகள் 4- ல் மொத்தம் 46 லட்சம், கனடா, வட அமெரிக்க நாடுகளில் முதல் நாள் பிரீமியர் வசூல் தமிழ்வெர்ஷன் மட்டும் 12கோடி, தெலுங்கு, ஹிந்தி வெர்ஷன்களில் மொத்தம் ஓவர்சீஸ் கலக்ஷன் 50 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் வருகின்றது.

மொத்த வசூல் முதல் நாள் 200 கோடியை தாண்டியதாக தெரிகிறது. வெள்ளிக்கிழமை சற்று கீழிறங்கி சனி, ஞாயிறு வசூல் உச்சத்தை எட்டும் எனதெரிகின்றது. பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையிலும் படத்திற்கான வரவேற்பு மிகுந்து காணப்படுவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

பொதுவாக இந்திப் படங்களையே வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ் செய்வது வழக்கம். அதையும் தாண்டி 2.0-வை வியாழக்கிழமை ரிலீஸ் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கியிருப்பது பிரமிப்பு! அதுவும் அதிகாலை சிறப்புக்காட்சி என்பதை பாலிவுட் திகைப்பாக பார்க்கிறது.

ரஜினி என்னும் ஈர்ப்பு விசை இந்த ஓப்பனிங்கிற்கு காரணகர்த்தா என்றாலும், ஷங்கர் ரஜினியை சரியாக கையாண்டுள்ளார் என்பதும் சரியே. சந்திரமுகி வெற்றி விழாவில் வேட்டையன் கேரக்டரை பலரும் புகழ்ந்த போது, ‘சந்திரமுகியை தாண்டமுடியுமா என்பது தெரியாது. ஆனால் சந்திரமுகி அளவு கொடுக்க முயற்சி செய்கிறேன்’ என்று ரஜினி சொன்னார்.

அதேபோல் அமைந்ததுதான், எந்திரன் பட வில்லன் சிட்டி கதாபாத்திரம்! அதை விஞ்சுகிற விதமாக 2.0 விலும் சிட்டி 2.0 வை காட்டியிருப்பது படத்தின் சக்சஸுக்கும் கலக்ஷனுக்கும் மிகப்பெரிய ப்ளஸ்! இது போன்ற கதாபாத்திரங்கள் லிங்கா, காலா படங்களில் இல்லை என்பதை உற்று நோக்கினால் ரசிகர்களும், மக்களும் ரஜினியிடம் எதிர்பார்ப்பதை ஷங்கர் சரியாக கணித்திருக்கிறார் என்றே சொல்ல முடிகிறது.

இது போன்ற ப்ளஸ்களால் படத்தின் முதல் நாள் ரசிகர்கள் கொண்டாடியதைவிட வார இறுதி நாட்க‌ளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் சென்னை மாயாஜாலில் படம் வெளிவந்து மூன்றாவது நாளில் அனைத்து ஸ்கீரின்களிலும் சேர்த்து 94 காட்சிகளாக அதிகரித்திருக்கிறார்கள். இதற்கு மேல் அதிகரிக்க நேரமில்லை என்பதுதான் நிஜம்!

சென்னை மாயாஜாலில் வேறு எந்தப் படமும் இதற்கு முன்பு 94 காட்சிகள் திரையிடப்படவில்லை. சென்னையில் இப்படம் முதல் நாள் வசூல் 2.74 கோடி. 2-ம் நாள் வசூல் 2.41 கோடி. மூன்றாம் நான்காம் நாள் வசூல் நிச்சயம் கூடுதல் தொகையைக் கொடுக்கும். இவ்வார முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் 10 கோடியை சுலபமாக தொடும். தமிழ் சினிமாவில் இந்த வசூலை முறியடிக்க இன்னும் 7 அல்லது 8 வருடங்களாவது ஆகும் என்கிறார்கள் திரை உலகத்தினர்.

சென்னை நிலவரம் இதுவென்றால், தமிழ்நாடு முழுவதும் தமிழ் வெர்ஷன் 200 கோடியை தமிழ்நாட்டில் மட்டும் நெருங்கும். இது முதல் வார வசூல் மட்டுமே. உலகம் முழுவதும் தமிழ் வெர்ஷன் மட்டும் முதல் வார இறுதியில் 350 கோடி முதல் 380 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் தற்போது பள்ளி அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள் முடிந்து விடுமுறை விட்ட பின்பு வசூல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இன்னும் குறைந்தபட்சம் இப்படம் நான்கு முதல் 5 வாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வசூல் தமிழ் வெர்ஷனிலேயே 400 கோடியை நெருங்கும் என்றும், உலகம் முழுவதும் 900 கோடியை நெருங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். தெலுங்குவெர்ஷன், ஹிந்தி வெர்ஷன் வசூலையும் கணக்கில் கொண்டால் 1500 கோடியை சுலபமாக தாண்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு தமிழ் படம் உலகளாவிய சாதனையை எட்டுகிற விதமாக 2.0 -வின் வசூல் இருக்கும் என்பது திரை ஆய்வாளர்களின் கருத்து.

திராவிட ஜீவா

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close