ரஜினிகாந்தின் 2.O எதிர்கொண்ட க்ளைமாக்ஸ் சவால்: ரிலீஸுக்கு முன்தினம் நடந்த இழுபறி

2.O Full Movie: 2.0 ரிலீஸுக்கு முந்தைய நாளான 28-ம் தேதி மாலை வரை இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தது. என்னவோ போங்கள், சிஷ்டம் சரியில்லை!

சென்னையில் 2.0 சந்தித்த சவால்களை தனி சினிமாவாக எடுக்கலாம்! 2.0 ரிலீஸுக்கு முந்தைய நாளான 28-ம் தேதி மாலை வரை இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்ததுதான் பரிதாபம்!

2.0 படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரஜினிகாந்த் என்கிற மாஸ் ஹீரோவைத் தாண்டி, ஷங்கரின் பிரமாண்டம், அக்‌ஷய்குமாரின் அசத்தல், தமிழ் சினிமா பார்த்திராத பட்ஜெட் என இந்த எதிர்பார்ப்பு எகிற காரணங்கள் பல!

இத்தனை எதிர்பார்ப்புக் கனவுகளுடன் காத்திருந்த ரசிகர்கள், சென்னையில் 2.0 படம் ரிலீஸுக்கு முன்பு எதிர்கொண்ட அரசியலை பார்த்து கிறுகிறுத்துப் போனார்கள். தமிழ்ப் பட உலகில் பல முன்னணி ஹீரோக்களின் படமும், தியேட்டர்களில் வாடகை அடிப்படையில் திரையிடப்படுகின்றன.

அதாவது, தியேட்டர்களை குறிப்பிட்ட தொகைக்கு வாடகைக்கு அமர்த்தி அதில் தங்கள் படத்தை திரையிட்டு, லாபமே நஷ்டமோ விநியோகஸ்தர் ஏற்றுக்கொள்வதுதான் இந்த பிசினஸ்! 2.0 படத்தை யாரிடம் கொடுத்தாலும், நஷ்டக் கணக்கு காட்டுவார்கள் என அஞ்சி, தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமே தியேட்டர்களில் வாடகை அடிப்படையில் வெளியிட முன் வந்தது.

இதன் பிறகுதான் அந்த அரசியல் அரங்கேற ஆரம்பித்தது. ‘தலைவர் (ரஜினி) படத்தில் எங்களுக்கு லாபமும் வேண்டும்’ என சில பெரிய சினிமா தியேட்டர் அதிபர்களே பேரத்தை ஆரம்பித்தனர். ‘வழக்கமாக மற்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நீங்கள் அப்படி கேட்பதில்லையே?’ என தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது.

அதற்கு தியேட்டர் அதிபர்கள் சொன்ன பதில் இருக்கிறதே… ‘மற்ற படங்களை தியேட்டர்களை நடத்தும் செலவுக்காக திரையிடுகிறோம். தலைவர் படங்களில் மட்டும்தானே நாங்கள் லாபம் பார்க்க முடியும்?’ எனக் கேட்டார்கள். உடனே தயாரிப்பு தரப்பு, ‘அப்படியானால் ரஜினி படத்தில் மட்டும்தான் எங்களுக்கு லாபம் என ஓப்பனாக ஸ்டேட்மெண்ட் விடுங்கள்’ என கொக்கி போட்டனர்.

திரையரங்க அதிபர்கள் இதற்கும் பிடி கொடுக்கவில்லை. ‘அப்படி செய்தால் மற்ற நடிகர்களை நாங்க பகைச்சுக்க வேண்டியிருக்கும். தலைவர் இன்னும் ரெண்டு படம் நடிச்சுட்டு அரசியலுக்கு போயிடுவார். நாங்க காலம் தள்ள வேண்டாமா?’ என நியாயம்(?) பேசினர்.

தயாரிப்பு தரப்பு, ‘மற்ற படங்களுக்கு ஒரு நியாயம். ரஜினி படத்திற்கு மட்டும் இப்படி நெருக்கடி கொடுப்பது என்ன நியாயம்?’ எனக் கேட்க, ‘தலைவரை எங்ககிட்ட பேசச் சொல்லுங்க. நாங்க பேசிக்கிறோம்’ என விடாப்பிடியாக நின்றனர், பிரபலமான தியேட்டர் அதிபர்கள் பலரே!

2.0 ரிலீஸுக்கு முந்தைய நாளான 28-ம் தேதி மாலை வரை இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்ததுதான் பரிதாபம்! இதனால் சென்னையில் பல தியேட்டர்களில் முன் பதிவே தொடங்கவில்லை.

இதுவே குறைந்த பட்ஜெட் படமாக இருந்திருந்தால், ‘விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேறு வழியைப் பாருங்கள்’ என தயாரிப்பு தரப்பு பிடிவாதம் காட்டியிருக்க முடியும். ஆனால் மெகா பட்ஜெட் படமான 2.0 -ஐ அதிக ஸ்கிரீன்களில் முதல் நாளே போட்டாக வேண்டிய கட்டாயம் லைகாவுக்கு இருந்தது.

சிறிய ஊர்களில் உள்ள பல தியேட்டர்களில் 3டி எஃபெக்டில் படம் வெளியிட முடியவில்லை. எனவே அதற்கான தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சென்னை மாநகரில் உள்ள தியேட்டர்களை மிஸ் செய்யவும் முடியவில்லை. எனவே வேறு வழியின்றி தயாரிப்பு தரப்பு பல இடங்களில் நெழிவு சுழிவாகப் பேசி படத்தை திரையிட்டனர்.

இவ்வளவு கெடுபிடிகளுக்கும் பிறகுதான் சென்னையில் முதல் நாள் வசூலே புதிய சாதனையை படைத்திருக்கிறது 2.0. இந்த அரசியல் குறித்து பட உலகினரிடம் பேசியபோது, ‘உலகம் முழுவதும் 5 நாட்களுக்கு முன்பே 2.0 படத்திற்கான வினியோகம், முன்பதிவு, ரசிகர்மன்ற காட்சிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டன. சென்னையில் மட்டும்தான் இந்த சர்ச்சைபுயல்.

குறிப்பாக தியேட்டர் முன்பதிவில் கடந்த 30 வருடங்களாக ராஜாங்கம் நடத்திவந்த ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே சிக்கல்கள் வரத்தான் செய்கின்றன. ஒன்று அடங்கினால் ஒன்று என்று முளைத்துக்கொண்டே இருந்தது.

அதுவும் தற்போது சினிமாவின் அடிப்படையே மாறியுள்ளதால் முன்புபோல் தியேட்டர்களின் வசூல் நிலவரங்களை யாராலும் கணிக்கமுடியவில்லை. அப்படியே கணித்தாலும் அவரவர்களின் தேவைக்கேற்ப முன்பின் அவர்களே மாற்றிப்பேசும் நிலையை உருவாக்கிவைத்துள்ளனர்.

சினிமாவில் ஒருகாலத்தில் தயாரிப்பாளர்கள் முதலாளியாக பார்க்கப்பட்டனர். இப்போது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் பவர் குறைந்து தற்போது தியேட்டர் அதிபர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ரஜினியை தவிர்த்த பெரிய நடிகர்களின் எந்தப் படமும் தியேட்டர்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்பதும் உண்மை. அதனால்தான் அவர்கள் ரஜினி படங்களுக்கு மிக அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். தயாரிப்பு நிறுவனமே வாடகை கொடுத்து ரிலீஸ் செய்தாலும் ரஜினி படத்திற்கு மட்டும் பழைய விநியோக முறையை கடைபிடிக்க சொல்லி நெருக்கடி கொடுக்கின்றனர்.

தங்களுடைய மற்ற படங்களின் நஷ்டத்தை ரஜினி படங்களில் சரிசெய்ய விரும்புகின்றனர். இதில் ரஜினியின் இமேஜும் சேர்ந்தே பாதிக்கப்படும் நிலை உருவானது. இந்த இழுபறியிலும் முறையாக அறிவிக்காத நிலையிலும் 2.0 பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்தி ரஜினியின் பெயரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது’ என்றார்கள், நம்மிடம் பேசிய சினிமா பிரமுகர்கள்.

என்னவோ போங்கள், சிஷ்டம் சரியில்லை!

திராவிட ஜீவா

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close