சினிமா உலகின் சுவாரசிய நிகழ்வுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.காம் வாசகர்களுக்காக ‘எக்ஸ்க்ளூசிவ்’வாக இங்கே தருகிறார், சினிமா விமர்சகர் திராவிட ஜீவா.
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் ரஜினி, விக்ரம் போன்று கடுமையாக போராடி முன்னுக்கு வந்தவர். அதுவும் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் நிற்கும் தவிர்க்க முடியாத ஹீரோ.
நடிக்க வந்த புதிதில் தன்னுடன் நண்பராக பழகிய ஆர்.டி.ராஜாவை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர். தற்போது தன்னுடைய நெருங்கிய நண்பரும், ‘நெருப்புடா’ பாடல் எழுதி பாடி புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் என்பவரை தன்னுடைய தயாரிப்பின் கனா படம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியுள்ளார்.
சினிமாவில் புகழடைந்த பின்பு ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நபர்களைப்போல் அல்லாமல் கஷ்டப்படும் நேரத்தில் உடன் இருந்த நண்பர்களை வளர்த்து விடும் நட்புக்கு மரியாதை தரும் மனிதராக சிவகார்த்திகேயன் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். வாழ்த்துகள் சிவா!
அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை..!
மிகச் சரியாக சொல்வதென்றால், ரஜினிகாந்தின் 2.0 உலகம் முழுவதும் 7434 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை வரவேற்பை பெற்றிருக்கும் 2.0 படம்குறித்து பிரபலங்கள் பாரபட்சம் இல்லாமல் பாராட்டித் தள்ளுகிறார்கள்.
பொதுவாக ஒரு பெரிய பட்ஜெட் படமோ அல்லது எதிர்பார்ப்பிற்குறிய படம் பற்றி சில பிரபலங்கள் கருத்து தெரிவிப்பர். அது சில நேரங்களில் சம்பிரதாய வாக்கியங்களாக இருக்கும். சில கருத்துக்கள் நன்றாகவும் இருக்கும்.
ஆனால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்திற்கு பல பிரபலங்கள் தானாக ட்வீட் செய்வதும், கருத்து சொல்வதும் அதிகமாக நடக்கின்றது. இந்தியா முழுவதும் நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் படத்தினை பற்றி பெருமையாக பேசுவது இந்திய சினிமாவிற்கு புதியது.
தமிழ் திரை பிரபலங்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், குஷ்பூ முதல் பாகுபலி புகழ் ராஜமௌலி, ஹிந்தியில் அமிதாப் முதல் அமீர்கான் வரை அனைவரும் இப்படம் இந்திய சினிமாவின் லேண்ட் மார்க் என்று சொல்கின்றனர்.
தியேட்டர் திரையிடலில் சாதனை, ஓப்பனிங் வசூல் சாதனை என ஆரம்பித்திருக்கும் 2.0, ஒரு வாரம் கடந்து எத்தனை புதிய சாதனைகளை படைக்கிறது எனப் பார்க்கலாம்.
அன்று அப்படி... இன்று இப்படி... லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா?
இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் அடுத்த புராஜெக்ட் இந்தியன்2 என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, நாயகிக்கான தேடுதல் வேட்டையில் முதல் சாய்ஸாக நயன்தாராவை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் அதில் நடிக்கவில்லை. அதற்கான காரணம், நயன் தாரா நடிப்பில் கோலமாவு கோகிலாவும் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2-ம் ஒருவார இடைவெளியில் வந்தன. அதையொட்டி நயன் தாரா உதிர்த்த வார்த்தைதான் இந்தியன் 2 தயாரிப்பு கம்பெனியை பின்வாங்கச் செய்ததாம். சிம்பிளாக கூறுவதென்றால், சம்பளம் மற்றும் மார்கெட் சார்ந்த ஈகோ விவகாரம்தான்.
விஸ்வரூபம் 2 படத்தின் வசூலைவிட, கோலமாவு கோகிலா மூன்றுகோடி ரூபாய் அதிகமாக, அதாவது 12 கோடி வசூலித்ததாம். அதைச் சொல்லியே தனது சம்பளத்தை ‘6 சி’க்கு குறைக்கமுடியாது என்று கறாராக சொன்னாராம் நயன். இதில் இந்தியன் 2 படக்குழு நாயகன் டென்ஷன் ஆனார்.
விஜய், அஜித் படத் தயாரிப்பாளர்கள் நயன்தாராவின் சமீபத்திய கிரேஸால் தங்களுடைய பட ப்ரமோஷன் கூடும் என்பதால் சம்பள விஷயத்தில் கண்டு கொள்ளவில்லையாம். ஆனால் சீனியர் கமல் அப்படி இருக்க முடியுமா? அதனால்தான் நயன் நடிகையை கழற்றி விட்டதாக கூறுகிறார்கள்.
இதே நயன் சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளம் நடிருக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார். பின்பு அதே நடிகர், இளம் நடிகர்களில் நம்பர் ஒன்னாக மாறியதும் சம்பளத்தை குறைத்துக் கொண்டு வாய்ப்பு கேட்ட வரலாறு உண்டு.