2.O Review 3: தமிழ் சினிமாவின் தாண்ட முடியாத எல்லைக் கோடு

2.O Movie Review: சிட்டியின் அதகளம், ரஜினியின் ஆக்ஷனும் மாஸ் அப்பீலும் கொஞ்சம்கூட குறையவில்லை என்பதை காட்டுகின்றது. மொத்தத்தில் படம் இந்திய சினிமாவின் மைல் ஸ்டோன்.

2.O Movie Review in Tamil:: ஹாலிவுட் சினிமாவிற்கு சவால் விட்டிருக்கும் தமிழ் படம், இன்னும் சொல்லப் போனால் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் டெக்னிக்கல் பிரமாண்டமாக 2.0 மிரட்டியிருக்கிறது. இந்திய சினிமாவில் எவரும் தொடாத வியாபார எல்லையைத் தாண்டி, செலவு செய்து ஒரு படத்தை தயாரிப்பது என்றால் ரஜினி மீதும் ஷங்கர் மீதும் எப்பேற்பட்ட நம்பிக்கையை லைகா வைத்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்றிவிட்டார்கள் என்பதைவிட, லைகாவையே படத்தின் ரிசல்டால் திகைக்க வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிஸ்டர் பிரமாண்டம் ஷங்கர் இவர்களுடன் லைகா கூட்டணி போட்டு ஹாலிவுட் சினிமாவை மிரட்டியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் லைகா நிறுவனம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்தனர். இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 2.0 தான்!

அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை உலக நாடுகள் பலவற்றில் வெளியானதே ஒரு ரெக்கார்ட்தான். ஆஸ்கார் நாயகரான ஏ.ஆர். ரஹ்மான் இசை, இன்னொரு ஆஸ்கார் நாயகர் ரசூல் பூக்குட்டியின் ஆர்ட் டைரக்டஷன், முத்துராஜின் ஒளிப்பதிவு எடிட்டிங் என படத்திற்கு ‘வெயிட்’ ஏற்றியிருக்கிறார்கள். படத்தின் சிஜி வொர்க் எனப்படும் பணிகள் ஹாலிவுட் ஸ்டுடியோவில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன என்பதே இந்தப் படத்திற்கான மெனக்கெடலை நமக்குச் சொல்லும்.

ரசிகர்கள் மத்தியிலான எதிர்பார்ப்பைவிட ஒட்டு மொத்த இந்திய சினிமா பிரபலங்களே எதிர்பார்த்த படம் 2.0 என்று சொன்னால் மிகையாகாது. 600 கோடி பட்ஜெட்டையும், அதைத் தாண்டிய எதிர்பார்ப்புகளையும் சுமந்திருக்கிற தோள், சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் ஷங்கர், அக்‌ஷய்குமார் ஆகிய மூவருடையது!

படத்தின் கதை: ஒரு மனிதனின் செயல்களையும் சக்திகளையும் பூமியில் இதுவரை மனித இனம் கண்டிராத ஒரு தீய சக்தி பயன்படுத்தினால் அது எவ்வகை இழப்புகளை ஏற்படுத்தும் என்பதை லாஜிக் பார்க்காமல் அவதார் பாணியில் ஷங்கர் கூறியிருக்கிறார். எந்திரன் முதல் பாகத்தில் சிட்டியை தவறான ரோபோவாக்கி அதனாலேயே அழியும் வில்லனின் மகன், அதேபோல் அழிவு சத்தியை பயன்படுத்த நினைக்கிறார். அதை தடுக்க சிட்டியை உருவாக்கிய சயின்டிஸ்ட் வசீகரனை நாடுகின்றனர். அவரும் சிட்டியை நியூ வெர்ஷனில் உருவாக்கி அழிவு சக்தியிலிருந்து மீட்டெடுக்கிறார்.

வசீகரனாக வரும் ரஜினி முதல் பாகத்தைப் போலவே இருக்கிறார். ஆனால் அக்ஷ்ய்குமார் படம் முழுக்க வியாபித்து ஒட்டு மொத்த வில்லத்தனத்தை காட்டி மிரட்டியுள்ளார். அதுவும் பறவை போலவும், வித்தியாசமான விலங்கைப் போலவும் மனிதனாகவும் வேறுபடுத்தி காட்டி வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு, அவர் இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகராக இனிவரும் தலைமுறையால் போற்றப்படுவார் என்பதை உணர்த்துகிறது.

இயக்குனர் ஷங்கர், ‘பாகுபலி’ ராஜமௌலிக்கு தான்தான் குரு என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘ஆல் டைம் கிங்’காக இந்திய சினிமாவில் அழுத்தமாக தடம் பதித்துள்ளார். கலை இயக்குனர் ரசூல் பூக்குட்டி உலகத் தரத்தையும், எடிட்டர் திஸ் பெஸ்ட் ஹிஸ் கேரியர் என்னும் அளவில் பங்காற்றியுள்ளனர்.

எமிஜாக்சன் ரஜினியுடன் நடித்த பிரபலங்கள் பட்டியலில் இருப்பார். படத்தின் இரு பெரும் மலைகளுக்கு முன் மற்ற கதாபாத்திரங்கள் எடுபடவில்லை என்பது சிறு குறையானாலும் அது தெரியவில்லை.

ரசூல் பூக்குட்டியின் உழைப்பும், படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட சிஜி பணிகளும் மீண்டும் ஆஸ்கரை நோக்கி இந்திய சினிமா பயணிக்கும் என்னும் அளவு மிகச்சிறப்பாக இருக்கின்றன. இந்தப் படத்தின் 3 டி தொழில்நுட்பம் குழந்தைகளை மட்டுமல்ல, அனைவரையும் பிரமிக்க வைக்கும்.

இது அத்தனையையும் தாண்டி இந்திய சினிமாவின் ஆல்டைம் எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக ரஜினியை நிரூபித்திருக்கும் கதாபாத்திரம் சிட்டி. இடைவேளை முடிந்தவுடனே கிளைமாக்ஸ் போல் படு ஸ்பீடாக படம் ராக்கெட் போல் பறக்கிறது. சிட்டியின் அதகளம், ரஜினியின் ஆக்ஷனும் மாஸ் அப்பீலும் கொஞ்சம்கூட குறையவில்லை என்பதை காட்டுகின்றது. மொத்தத்தில் படம் இந்திய சினிமாவின் மைல் ஸ்டோன் என்பதிலும் தமிழ் சினிமாவின் தாண்ட முடியா எல்லைக்கோடு என்பதிலும் சந்தேகமில்லை.

2.0 மதிப்பீடு: ரசிகர்களின் ஆதரவு 70%, சினிமா ரசிகர்கள் 70%, பொதுமக்கள் 80%.

திராவிட ஜீவாGet all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close