2.O Review 2: உலக சினிமாவை திருப்பிய பிரம்மாண்டம்

2.O Review: சிட்டி ரோபோவாகட்டும், இன்னும் பல சர்பிரைஸ் ரோலிலும் வரும் ரஜினியாகட்டும், எல்லாம் வேற லெவல்

அன்பரசன் ஞானமணி

நவீன டெக்னாலஜி மூலம் உணர்ச்சிகளை நம்மில் கடத்தி, அதில் பல உணர்வுகளை ததும்ப விட்டு, நமது ‘ஒற்றைக் கையை’ நாமே குற்ற உணர்ச்சியுடன் 2.O என்ற பிரம்மாண்ட பூதக் கண்ணாடி வழியே ஊடுருவி பார்க்க வைத்திருக்கும் இயக்குனர் ஷங்கருக்கு முதலில் பாராட்டுகள்.

2.O… 2015 ஜூன் மாதம் முதற்கட்டப் பணிகளைத் துவக்கிய இப்படம் ஒருவழியாக 2018 நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. 2010ல் வெளியான ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இப்படம், ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்திருகிறது என்று பார்ப்போம்.

இப்படத்தின் கதை ஓரளவிற்கு நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும், ஒரு சிறிய சுருக்கம்.. “ஊரில் உள்ள செல் ஃபோன்கள் எல்லாம் திடீரென மாயமாகிப் போக,  மக்களுடன் சேர்ந்து அரசாங்கமும் குழம்புகிறது. எப்படி இந்த ஃபோன்கள் காணாமல் போகிறது? என்பதை விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடிக்கிறார். எதிரி யார் என்பதை கண்டறியும் வசீகரன், அரசாங்கத்தின் அனுமதியுடன் ‘சிட்டி’ ரோபோவை களத்தில் இறக்கி எதிரியை அழிக்கிறார்”. அவ்வளவு தான்.

ஆனால், கதையின் இந்த நான்கு வரிகளில் பாசம், அன்பு, கெஞ்சல், கையாளாகாத்தனம், துரோகம், ரௌத்திரம், பழி வாங்கல் என அனைத்தையும் விதைத்து, கூடவே பட்ஜெட்டுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தையும் விதைத்து மாயாஜாலம் காட்டி, நம்மை தனி உலகத்துக்கே அழைத்துச் சென்று படத்தை அறுவடை செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

எந்திரனில் இருந்த அதே சாஃப்ட் விஞ்ஞானி வசீகரன், இதிலும் நம்மை வசீகரிக்கிறார். விஞ்ஞானிக்கென்ற ஒரு உடல் மொழி நம்மை அறியாமல் நமக்குள் பதிந்திருக்கும். அதை வெளிப்படுத்த முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், கடினமான டெக்னிக்கல் டெர்ம்ஸ்களை உச்சரிப்பதில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

இருப்பினும், அவற்றையெல்லாம் தாண்டி சிட்டி ரோபோவாகட்டும், இன்னும் பல சர்பிரைஸ் ரோலிலும் வரும் ரஜினியாகட்டும், எல்லாம் வேற லெவல். ஒரு சினிமா கலைஞனாக அவரைப் பார்த்து ஒரேயொரு முரட்டு ‘சல்யூட்’ வைக்கனும் போல் உள்ளது. என்ன ஒரு டெடிகேஷன்! என்ன ஒரு ஸ்க்ரீன் பிரசன்ஸ்!… 68 வயதில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்பதே எனது மில்லியன் நியூரான்களின் கேள்வி.

அக்ஷய் குமார்…. பக்ஷி ராஜன் எனும் கேரக்டரில் நடித்துள்ளார்… சாரி, அசத்தியுள்ளார்… வெரி வெரி சாரி, மிரட்டியுள்ளார். பறவைகளின் மீது அவர் வைக்கும் காதலாகட்டும், ரேடியோ கதிர்களால் அவை துடிதுடித்து சாகும் போது அதைக் கண்டு மனம் உருகுவதாக இருக்கட்டும், காலில் விழுந்து கெஞ்சியும் கண்டுகொள்ளாத சமூகத்தின் மீது கொள்ளும் கோபமாக இருக்கட்டும், வில்லனாக வந்து ஒட்டுமொத்த மக்கள், அரசாங்கம், தொழிலதிபர்கள் என அனைவரையும் அலற வைப்பதாக இருக்கட்டும்….  அத்தனை சீனிலும் டாப் கிளாஸ் + மாஸ்.

அதிலும், அவரது டிரான்ஸ்ஃபர்மேஷன் சீனில் எல்லாம், உங்கள் கைகள் பர்மிஷன் இல்லாமலேயே கிளாப்ஸ் அடிக்கும் என்பது உறுதி. தனது உள்ளங்கையில் குருவி ஒன்று துடிதுடித்து இறப்பதை பார்த்து, அவர் துடிக்கும் போது, நம் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்ப்பதும் உறுதி.

ஏமி ஜாக்ஸன்… விஞ்ஞானி வசீகரனின் ரோபோ உதவியாளராக வந்து, தனது கேரக்டருக்கு ஏற்ற ‘ஷேப்’-ஐ வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்றபடி படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து கேரக்டர்களும், ஷங்கரின் ஆணைக்கிணங்க ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான நடிப்பை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

நெட், போல்ட், வயர், சிலிகான், இன்னும் பிற அயிட்டங்கள் என அனைத்தையும் கலந்துகட்டி இயக்குனர் ஷங்கர் ரோபோவை உருவாக்கினாலும், அதற்கு இதயமாக.. ஐ மீன் Chip-ஆக இருந்து உயிரூட்டி இருப்பது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை தான். நீங்க-லாம் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் ரஹ்மான். ஹேட்ஸ் ஆஃப்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங், VFX குழு, முத்துராஜின் கலை, ஜெயமோகனின் வசனம் ஆகியவை ஷங்கரின் ஐந்து விரல்கள்.

ஒன்றை இங்கு நிச்சயம் சொல்லியாக வேண்டும். எந்திரன் ரஜினி படம் என்றால், 2.0 ஷங்கர் படம். புரிந்திருக்கும் என நம்புகிறேன். ஒரு சினிமா ரசிகனாக படத்தை ரசிக்க முடிந்த நம்மால், ‘ரஜினி’ என்ற பிராண்ட்டை பார்க்க முடியவில்லையே என்ற சிறு வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாக, படம் பார்த்து வெளிவரும் போது, உங்கள் ஒற்றைக் கையை… அதாவது உங்கள் செல் ஃபோனை ஒருமுறையாவது வெறுப்போடு பார்ப்பீர்கள். அதுதான் இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றி!.

இந்திய சினிமாவில் ஒரு Brobdingnagian மூவி இந்த 2.o!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close