பா. ரஞ்சித்துக்கு பெருகும் ஆதரவு.. அவருக்கு துணையாக நிற்போம் என 300 சக கலைஞர்கள் கையொப்பம்!

பா.ரஞ்சித் அவர் கூறிய கருத்துக்காக மிக மோசமாக வசைபாடப்பட்டு வருகிறார்

By: Updated: June 19, 2019, 12:08:12 PM

pa ranjith about raja raja cholan : தமிழகத்தில் இப்போது தண்ணீர் பிரச்சனைக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் டாப்பிக் என்னவென்றால் அது ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் பேசிய சர்ச்சை கருத்து தான்.

தமிழ் சினிமாவில் மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களை தந்தை படைப்பாளி, தலித் ஆதரவாளர், திருமாவளவனின் அதிக பாராட்டுப் பெற்ற இயக்குனர் என புகழப்படும் இயக்குனர் ரஞ்சித் 2 வாரத்திற்கு முன்பு கும்பகோணத்தில் நடைப்பெற்ற விழாவில் பேசிய போது இந்த கருத்தை பதிவு செய்திருந்தார்.

“ மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிளவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார்.

இந்த சூழ்நிலையில் ராஜராஜ சோழனை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு எதிர்ப்பு குரல்கள் வெடித்தன. சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக வசைப்பாடவும் தொடங்கினர். நீதிமன்றத்தில் அவரின் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்ப்பில் பா. ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ரஞ்சித், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே அவ்வாறு பேசியதாக கூறியிருந்தார். மேலும் எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனவும் கூறினார். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல , நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை எனவும் ரஞ்சித் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், ரஞ்சித்துக்கு ஆதரவாக சமூக ஆர்வாலர்கள், பத்திரிக்கை துறை சேர்ந்த நண்பர்கள், எழுத்தாளர்கள் சிலர் ஒன்று திரண்டனர். #standwithranjith என்ற ஹாஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்டாகினர். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் கூட்டறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் 300 பேர் ஒருசேர கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ இயக்குநர் பா. இரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த கருத்து பேசுபொருளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூறிய கருத்தை சற்று பின்னோக்கிப் பார்த்தால் ஆய்வுபுலத்தில் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் விஷயங்களைத் தான் பா.இரஞ்சித் பேசியிருக்கிறார் என்பது அனைவருக்கும் புலப்படும்.

பா.ரஞ்சித் அவர் கூறிய கருத்துக்காக மிக மோசமாக வசைபாடப்பட்டு வருகிறார்.அரசாங்கமே பா. இரஞ்சித்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அது விசாரணையில் இருக்கிறது. இந்த போக்குகள் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக மாறியிருக்கிறது என்று கருதுகிறோம்.

குறிப்பாக ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் இப்படி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக படைப்பாளிகளாக அவருடன் நிற்க வேண்டியது அனைவரது கடமையும் ஆகும். ஆகவே, பா. இரஞ்சித்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பர்களுடைய கையொப்பங்களையும் இணைக்கிறோம்” என பதிவு செய்து அதன் கீழ் 300 கலைஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், இந்த அறிக்கையை தமிழகம் முழுவதும் பரப்பி அதற்கு ஆதரவு தருபவர்களின் கையெழுத்தை பதிவு செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பா. ரஞ்சித்துக்கு தீடீரென்று ஒருபுறம் ஆதரவு குவிந்து வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:300 artistes in tamil nadu launch petition to support pa ranjith

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X