Seven Movie Review: நிஸார் ஷஃபி இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படம் 7 (செவன்).
ரஹ்மான், ரெஜினா, நந்திதா, ஹவிஷ், அனிஷா ஆம்ரோஸ், த்ரிதா செளத்ரி, அதிதி ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் தான் இயக்குநர் நிஸார்.
ஓர் ஆணின் வாழ்க்கையில் 6 பெண்கள் எப்படியெல்லாம் இடம் பெறுகிறார்கள் என்பது தான் செவன் படத்தின் ஒன் லைன்.
ஐடி துறையில் வேலை செய்யும் ஹீரோ (ஹவிஸ்) நந்திதாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். சில நாட்களில் அவர் காணாமல் போக, காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரி ரஹ்மானிடம் புகாரளிக்கிறார் நந்திதா.
அதே நபரை கணவர் எனக் கூறி ‘மிஸ்ஸிங்’ கம்ப்ளைண்ட் கொடுக்கிறார்கள் இன்னும் 3 பெண்கள். இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடிக்காரன் என்ற ரீதியில் விசாரணையை முடுக்கி விடுகிறது காவல் துறை. முடிவில் ஹவிஸை கைதும் செய்கிறது.
இதில் நான்காவதாக புகார் கொடுத்த பெண் தான் என்னுடைய மனைவி என்கிறார் ஹவிஷ். இதனால் குழப்பமடைந்த காவல்துறை இன்னும் விசாரணையை தீவிரப்படுத்துகிறது.
இதன் பின்னணியில் ரெஜினா இருப்பது, பின்னர் போலீஸுக்கும், ஹவிஷுக்கும் தெரிய வருகிறது.
ரெஜினா யார், அவருக்கும் ஹீரோ ஹவிஷுக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் மீதிக் கதை.
படத்தின் இயக்குநர் ஒளிப்பதிவாளர் என்பதில் உள்ள ப்ளஸ், அனைத்து ஃப்ரேம்களிலும் தெரிகிறது. நல்ல கதை சரியான பாதையில் பயணிக்காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது.
வரும் இடங்களில் எல்லாம் கிளாப்ஸ் அள்ளுகிறார் ரஹ்மான். நாயகன் முதல் பாதியில் ஈர்க்கவில்லை. இரண்டாம் பாகத்தில் ஆங்காங்கே கவனம் பெறுகிறார்.
நந்திதா உட்பட அனைத்துப் பெண்களும் கவனம் பெறுகிறார்கள். ரெஜினாவின் திரை வாழ்க்கையில் இது வித்தியாசமான கதாபாத்திரம்.
படத்தில் தூவப்பட்டுள்ள ட்விஸ்ட்கள் ரசிகர்களிடம் கவனம் பெறுகின்றன. சேட்டன் பரத்வாஜ் பாடல்களில் ஏமாற்றி, பின்னணியில் தோள் கொடுக்கிறார். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் தோனியின் ஜெர்ஸி நம்பர் போல இந்த செவனும் (7) ரசிகர்களிடம் கவனம் பெற்றிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.