எஸ். சுபகீர்த்தனா
உலகம் முழுவதும் 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸை கட்டி இழுத்த 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தற்போது இயக்குநர் மணிரத்தினமுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.
தாய்க்குடம் பிரிட்ஜ் என்ற முண்ணனி ஆல்பம் குழுவின் முக்கிய நபர் கோவிந்த் வசந்தா. இவர் சமீபத்தில் வெளியான 96 படத்திற்கு இசையமைத்தவர். காதலே காதலே பாடம் முதல் இரவிங்கு தீவாய் அனைத்துமே அப்படத்தில் மிகப்பெரிய ஹிட். இவர் தற்போது படைவீரன் படத்தின் இயக்குநர் தன சேகரனுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இயக்குநர் மணிரத்தினம் நடத்தும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் நிதியுதவி வழங்கவுள்ளது.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்தியேக பேட்டி
இது குறித்து கோவிந்த் வசந்தா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில், மணிரத்தினமுடனான சந்திப்பு குறித்து விவரித்தார்.
“விரைவில் தொடங்க இருக்கும் இப்படத்தின் கதையை கேட்பதற்காக இயக்குநர் தனா அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது கதை குறித்து நிறைய பேசினோம். அதன் பிறகு மணி ரத்தினம் சாரை சந்திக்கிறாயா என்று கேட்டார். அந்த கேள்விக்கு என்ன பதில் கொடுக்க வேண்டுமென்றே தெரியாமல் திகைத்துப் போனேன்.
அவரை சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன். அதே நேரத்தில், ஏதோ ஒரு சிறுவன் தேர்வை கண்டு பயப்படுவது போல பதற்றமாகவும் இருந்தேன். அந்த நொடி முழுவதும் நான் அவரின் தீவிர ரசிகன் என்பதை மட்டுமே உணர்ந்தேன். அவருடனான அந்த 10 நினிட சந்திப்பை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. பதற்றத்திலும், ஆச்சரியத்திலும் என் முகம் சிவந்ததை அவரும் பார்த்தார்.” என்று அந்த நிகழ்வை கண்முன்னால் நடப்பது போலவே ஆர்வம் குறையாமல் விவரித்தார்.
அந்த சந்திப்பின்போது 96 படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்தினம், கோவிந்தை பாராட்டியதாகவும், அவரின் பாராட்டு மிகுந்த உற்சாகத்தை தந்ததாகவும் கூறினார். பின்னர் கோவிந்த் வசந்தாவின் அடுத்த பிராஜெக்டுகள் குறித்து கேட்டறிந்தோம். அப்போது,
“2 மாதங்களுக்கு முன்பு சீதக்காதி படத்திற்கான இசையமைப்பு வேலைகளை முடித்தேன். சீதக்காதி படத்திற்கு இசையமைத்தது ஒரு சவாலாகவே இருந்தது. சீதக்காதி வேலைகளை தொடங்கிய பின்னரே 96 படத்தின் இசையை தொடங்கினேன். பிறகு இரண்டு படங்களுக்கும் ஒரே சமயத்தில் வேலைப் பார்த்தேன். எனக்கு உதவியாளர்கள் என்று இதுவரை குழுவில் யாரும் இல்லை அதனால் நேரம் பார்க்காமல் உழைத்து வந்தேன். ஆனால் 96 படம் முதலில் வெளியாகும் என்று தெரிவித்த காரணத்தால் முதலில் அந்த படத்திற்கான இசையமைப்பு பணிகளை கவனத்துடன் முடித்து கொடுத்தேன். அடுத்ததாக உரியடி 2 படத்தின் இசையும் அனைவரையும் கவரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆல்பம் மூலம் பிரபலமாக இருந்த கோவிந்த், மலையாளத்தில் வெளியான நார்த் 2 காதம் படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அறிமுகமானார். பின்பு தமிழில் அசுரவதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகி, 96 படத்தில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இவரின் வருங்கால எதிர்பார்ப்பு முழுவதும் தமிழ் திரைப்படங்களை நோக்கியே என்றும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.