X

ஸ்ரீதேவி என்னும் ஒரு குழந்தை : பத்திரிகையாளனின் பார்வை

சக மனிதர்கள் எப்படியோ அப்படித்தான் பிரபலங்களும்… ஒரு பாராட்டுக்கு, ஒரு வாழ்த்துக்கு, ஒரு ஆதரவுக்கு ஏங்குகிறவர்கள் என்பதை உணர்ந்த நாள் அது.

க. ராஜீவ் காந்தி

2012ல் ஒரு நாள்… அதற்கு முன் ஜுனியர் விகடனில் ஏரியா நிருபராக இருந்த நான் ஆனந்த விகடனுக்காக சென்னை அலுவலகத்துக்கு வந்த புதிது.

இங்க்லீஷ் விங்க்லீஷ் படத்து புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் ஸ்ரீதேவி. வார இதழ்களுக்கு பேட்டி தரவிருப்பதாக அழைப்பு வரவே கிளம்பினேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. அந்த வார இதழில் அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கிடைப்பதே சிரமம் தான். எடுத்து அடுத்த வாரத்துக்கு வைத்துக்கொண்டால் மற்ற இதழ்களில் வந்துவிடுமே…

பேட்டி எடுக்க செல்ல ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன். புதிதாக சேர்ந்திருந்ததால் எனக்கு மேல் இருப்பவர்களிடம் கலந்தாலோசித்த பின் தான் பேட்டி எடுக்கவே கிளம்புவேன். அப்படி என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியாக ஒன்றை சொன்னார்கள். அந்த கேள்வி என்னை திடுக்கிட வைத்தது. எல்லோருக்குமே தெரியும் ஸ்ரீதேவியின் பெர்சனலை குறிவைக்கும் கேள்வி இது. பதில் கிடைத்தால் அந்த வாரத்துக்கான பரபரப்பு செய்தியாகிவிடும். ஆனால் எப்படி கேட்பது…? முதலில் அவரைப் பாராட்டி சில கேள்விகள், படத்தை பற்றி சில கேள்விகள், குடும்பம் பற்றிய கேள்விகள் என வலிக்காத கேள்விகளாக வரிசைப்படுத்திக் கேட்டு கிட்டத்தட்ட பேட்டியை முடிக்கும் இடத்துக்கே வந்துவிட்டேன்.

‘’ஒரு பெர்சனல் கேள்வி கேட்கலாமா?’’ என்று மிக பொலைட்டாக கேட்டேன்.

‘’ஓ தாராளமாக…!’’ என்றார். ’’

‘’பொதுவாக நடிகைகள் ஏற்கெனவே திருமணமான ஆண்களையே அவர்கள் குடும்பத்தை பற்றியெல்லாம் உணராமல் வளைத்துப் போடுகிறார்களே… ஏன்?’’ கேட்டு முடித்தேன்.

சில நொடிகள் என்னை உற்றுப் பார்த்தவர் ‘’நோ கமெண்ட்ஸ்ங்க…’’ என்று சிரித்துக்கொண்டே விடை தந்தார். எதிர்பார்த்த பரபரப்பு கிடைக்கவில்லை என்றாலும்கூட ஸ்ரீதேவியின் அந்த பண்பு கவர்ந்தது. ச்சே… சங்கடப்படுத்தி விட்டோமே…! என்று எனக்கு ஏதோ உறுத்திக்கொண்டிருந்தது.

இங்லீஷ் விங்லீஷ் ரிலீஸான அன்று காலையிலேயே படத்தைப் பார்த்துவிட்டேன். ஃபோன் செய்தேன். எதிர்பார்த்திருக்கவில்லை என்னுடைய அழைப்பை. படம் குறித்து வெகுநேரம் பேசினேன். ‘’ரொம்ப சந்தோஷம்ங்க… தமிழ்நாட்டுலேர்ந்து நீங்க தான் முதல்ல கூப்பிட்டு பேசுனது’’ என்று உற்சாகமானவர் அதன் பின்னும் நல்ல நட்பில் இருக்கிறார். சக மனிதர்கள் எப்படியோ அப்படித்தான் பிரபலங்களும்… ஒரு பாராட்டுக்கு, ஒரு வாழ்த்துக்கு, ஒரு ஆதரவுக்கு ஏங்குகிறவர்கள் என்பதை உணர்ந்த நாள் அது.

‘உங்க மனைவி பார்த்தாங்களா… அவங்க என்ன சொன்னாங்க?’ என்று வாஞ்சையுடன் கேட்டார். ஒரு படம் அதன் டார்கெட் ஆடியன்ஸை ரீச் செய்ய வேண்டும் என்ற ஒரு இயக்குநருக்கு உண்டான அக்கறை அதில் இருந்தது.

அதன் பிறகு அவரிடம் நான்கு முறை பேசியிருக்கிறேன். இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஸ்ரீதேவியை வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு அவர் என்றும் 16 ஆக தெரிவார். ஆனால் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும் தான் அவர் என்றும் 6 ஆக தெரிவார். அவர் ஒரு வளர்ந்த குழந்தை. குரல் மட்டுமல்ல சுபாவமும் தான்… கோபப்படும்போது கூட ஒருவரை குழந்தை போல வாரி எடுத்து கொஞ்சத் தோன்றுகிறது என்றால் அது ஸ்ரீதேவியை மட்டும் தான்… குழந்தைகள் கோபப்படும்போது பார்த்திருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மை புரியும்.

பாலிவுட் இயக்குநர் பால்கியின் மனைவி கௌரி ஷிண்டே தான் ஸ்ரீதேவியை வைத்து இங்க்லீஷ் விங்க்லீஷ் படத்தை இயக்கியது. தயாரித்தது பால்கி. சமீபத்தில் கூட பால்கியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ’எனக்கே ஸ்ரீதேவியை வைத்து படம் இயக்க ஆசை இருக்கு. அவங்க படத்துல இருந்தா ஹீரோவே தேவையில்லை.அவங்களை ஹீரோயினாக்கி ஒரு தமிழ் படம் பண்ணனும்’ என்றார்.

ஸ்ரீதேவியிடம் நான் கடைசியாக பேசியது ஆறு மாதங்களுக்கு முன்பு. என்னுடைய முதல் படத்தில் அவருக்கு மிக முக்கிய ரோல் ஒன்றை வைத்திருந்தேன். தகவல் சொன்னதும் சினாப்சிஸை மெயிலில் அனுப்ப சொன்னார். படித்துவிட்டு அவரே அழைத்து பேசினார். ‘இது ஹிந்திக்கும் நல்லா வொர்க் அவுட் ஆகுற சப்ஜெக்டுங்க… நல்லா பண்ணுங்க. கண்டிப்பா பெரிய லெவலுக்கு போகும். ஆனா எனக்கு இந்த ரோல்ல இண்ட்ரெஸ்ட் இல்லை. நெகட்டிவ் ரோல் வேண்டாங்க…’ என்று அதே பொலைட்டாக சொன்னார்.

இந்த குழந்தையை நாம் சரியாக கொண்டாடவில்லையோ என்ற ஆதங்கம் மட்டும்தான் மிஞ்சுகிறது.

மிஸ் யூ ஸ்ரீதேவி…

Web Title:

A child named sridevi journalists vision

Next
Just Now
X