பாபு

சென்ற வாரம் சில உதிரி படங்கள் மட்டுமே வெளியாயின. வரும் வியாழன் காலா வெளியாவதால் ஆறு தினங்களில் திரையரங்கை இழக்க நேரும் என்று பெரிய பட்ஜெட் படங்களை சென்ற வாரம் யாரும் வெளியிடவில்லை. வெளியான சில உதிரி படங்கள் பாக்ஸ் ஆபிஸின் அருகிலேயே இல்லை.

அதற்கு முந்தைய வாரம் – மே 25 – சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் வெளியாக அனுமதிக்கப்பட்டன. அதில் ‘செம’, ‘ஒரு குப்பைக் கதை’ இரண்டும் மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்து, இந்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் உள்ளன. இரும்புத்திரை மட்டும் இல்லையென்றால் இந்த வார பாக்ஸ் ஆபிஸ் தமிழ் சினிமாவுக்கு பரிதாபமே.

ஆங்கிலப் படமான சோலோ – ஏ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி கடந்த ஞாயிறுவரை 26.70 லட்சங்களை சென்னையில் வசூலித்து தனது ஓட்டத்தை கிட்டத்தட்ட நிறுத்தியுள்ளது. ஸ்டார் வார்ஸ் சீரிஸ் ஏற்கனவே ரசிகர்களின் பொறுமையை சோதிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்தப் படம் ஸ்டார் வார்ஸ் மீதான எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது.

மே 25 வெளியான ஜீ.வி.பிரகாஷின் செம சுமாராகவே போகிறது. சென்ற வார இறுதியில் 4.5 லட்சங்களை மட்டும் வசூலித்த இப்படம் கடந்த ஞாயிறு வரை சென்னையில் 1.10 கோடியை தனதாக்கியுள்ளது. மிகச் சுமாரான வசூல். பி மற்றும் சி சென்டர்களிலும் படத்துக்கு வரவேற்பில்லை. நாச்சியார் என்ற வெற்றி, செம என்ற தோல்வியுடன் ஜீ.வி.பிரகாஷின் 2018 கரியர் சமநிலையில் உள்ளது.

மே 25 வெளியான ஒரு குப்பைக் கதைக்கு கலவையான விமர்சனங்கள். படம் சென்ற வார இறுதியில் 5.40 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. ஞாயிறு வரை இதன் சென்னை வசூல், 35.71 லட்சங்கள். மிகவும் குறைவு. சென்னையை தவிர்த்த இடங்களில் இந்தளவு வசூலும் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

நான்காவது வாரத்திலும் தெலுங்குப் படமான மகாநடி சென்னையில் 15.34 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 2.02 கோடிகள். பல நேரடித் தமிழப் படங்களின் வசூலைவிட அதிகம்.

சென்ற வாரம் தெலுங்கில் ஆபிஸர், ராஜு காடு என இரு படங்கள் வெளியாயின. அதில் ஆபிஸர் படம் சென்னையில் பல திரையரங்குகளில் வெளியானது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுன் நடித்துள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கழுவி ஊற்றுகிறார்கள். முதல் மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 16.50 லட்சங்களை வசூலித்துள்ளது.

இந்தப் படங்கள் அனைத்தையும் கடந்து விஷாலின் இரும்புத்திரை வெற்றிநடை போடுகிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 162 திரையிடல்களில் 51.50 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் 5.83 கோடிகளை படம் தனதாக்கியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 40 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் ஹிட் இரும்புத்திரை என்று தாராளமாகச் சொல்லலாம். கலகலப்பு 2 ஹிட் என்றாலும் தயாரிப்பாளர், எனக்கு லாபமில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம் வெளியான இரு பிறமொழிப் படங்கள் தமிழக பாக்ஸ் ஆபிஸில், குறிப்பாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஒன்று, ஜாக்கிசானின் ப்ளீடிங் ஸ்டீல். இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 38 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. இன்னொன்று கரீனா கபூர் நடித்திருக்கும் இந்திப் படம் வீர் தி வெடிங். இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 54 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் சென்ற வார இறுதி வசூலில் இப்படமே அதிகம் என்பது முக்கியமானது.

×Close
×Close