சமீப காலங்களில் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. ஆர்யன் – ஷபானா, ரேஷ்மா – மதன்பாண்டியன், சித்து-ஸ்ரேயா, பிரவீன் தேவசகாயம்-ஐஸ்வர்யா என கடந்த சில நாட்களில் மட்டும் இத்தனை சின்னத்திரை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
ஷபானா-ஆர்யன் திருமணம் கூட இப்படித்தான். செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர் கார்த்திக்ராஜ். இவர்களின் ஜோடி மக்களின் விருப்பமான ஜோடியாக இருந்தது. இருவரும் காதலித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புரளி கிளம்பியது. ஆனால் இதை இருவரும் ஏற்கவில்லை.
இந்நிலையில் ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதனை ரசிகர்கள் நம்பவில்லை. வழக்கம்போல் இதுவும் புரளியாக இருக்கும் என நினைக்கும் வேளையில், இருவரும் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்து முடிந்தது.
ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்,ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திடீரென திருமணம் செய்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நடந்த ரேஷ்மா-மதன்பாண்டியன் கல்யாணத்திலும் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.
இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியிருப்பதாக தெரிகிறது. ஆரம்பத்திலே ஷபானாவை ஏற்றுக்கொள்ளாத ஆர்யனின் வீட்டார், அவனை விட்டு விலகும்படி ஷபானாவை மிரட்டுவதாகவும் இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் இதற்கு இருவர் தரப்பிலிருந்தும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது, சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்று பதிவு செய்திருந்தது மேலும் குழப்பத்தை உண்டாக்கியது.
இதனிடையே, ஷபானா மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஒரு தத்துவத்துடன் தன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு சிறு புன்னகை, கொஞ்சம் சந்தோஷம், ஒரு சின்ன நிலவு, கனவுகளின் ஓலைகளுடன், ஒரு வீட்டை கட்டுவோம்” என்று எழுதியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ஷபானா புடவையில் நெற்றியில் குங்குமம் வைத்து வெட்கப்பட்டு கொண்டிருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்ந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஷபானா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஷபானா-ஆர்யன் உண்மையாக மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது இது சீரியலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“