‘ஃபார்மர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிடிஇ லிமிடெட்’ என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையையும், ‘கூலி’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகளையும், மேலும் உணவு மற்றும் பானங்களுக்கு 30 சிங்கப்பூர் டாலரும் வழங்கும் என அறிவித்துள்ளது.
இச்செயலால் அந்நிறுவனத்தின் ரசிகர்கள் சில நிமிடங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதை "ஊழியர் நலன் மற்றும் மன அழுத்த மேலாண்மை நடவடிக்கை" என நிறுவனம் விளக்கியிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான 'எஸ்பி மார்ட்', ஆகஸ்ட் 14 அன்று காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பிரகாஷ் நம்பியார், "காலை 11:30 மணி முதல் வழக்கம் போல் வணிகம் தொடங்கும். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதுரை கிளையுள்ள ஒரு நிறுவனம், ஆகஸ்ட் 14 அன்று தங்கள் அனைத்து கிளைகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
"சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 'கூலி' திரைப்படம் வெளியாவதையொட்டி, ஆகஸ்ட் 14, 2025 அன்று விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மனிதவளத் துறைக்கு வரும் விடுமுறை கோரிக்கைகளை தவிர்க்கும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், "ரஜினிசம் 50வது ஆண்டு விழாவை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவதன் மூலம் கொண்டாட உள்ளோம்" என்று அந்நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கூலி' திரைப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக முன்பதிவுக்கான டிக்கெட் விற்பனை வியக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
'கூலி' திரைப்படம் சென்சார் போர்டால் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது, இது குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கு கிடைத்த அதிகபட்ச வெளிநாட்டு உரிமை தொகை இதுவாகும். ஆகஸ்ட் 14 அன்று 100 நாடுகளுக்கு மேல் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படம் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'வார் 2' திரைப்படத்துடன் ஒரே நாளில் மோதுகிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம், வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.