New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/06/aishwarya-rai-2025-07-06-00-16-07.jpg)
தனது குடும்பம் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்த அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீப காலமாக பாலிவுட் வட்டாரங்களில், நடிகர் அபிஷேக் பச்சனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குறிப்பாக அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் ஏற்பட்டதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் பல வதந்திகள் பரவி வந்தன. இந்த கிசுகிசுக்களுக்கு தற்போது அபிஷேக் பச்சனே நேரடியாக பதிலளித்துள்ளார். தனது குடும்பத்தின் உண்மையான நிலையையும், ஐஸ்வர்யாவின் மகத்தான பங்களிப்பையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நயன்தீப் ரக்சித் யூடியூப் சேனலில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், அபிஷேக் பச்சன் தனது குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசினார். குறிப்பாக மகள் ஆராத்யாவை வளர்ப்பதில் ஐஸ்வர்யாவின் அர்ப்பணிப்பிற்கு அவர் முழுப் பாராட்டையும் தெரிவித்தார். "ஆராத்யாவை வளர்ப்பதற்கான முழுப் பெருமையும் அவளது தாய்க்கே சேரும். நான் படப்பிடிப்பிற்காக வெளியே சென்று வரும் சுதந்திரத்தைப் பெறுகிறேன். ஆனால் ஆராத்யாவுடன் அதிக நேரத்தைச் செலவிட்டு, அவளுக்கான அனைத்து முக்கிய வேலைகளையும் ஐஸ்வர்யா செய்கிறார்.
அவள் ஒரு அற்புதமான தாய். சுயநலமில்லாதவள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக தாய்மார்கள் அனைவரும் இப்படித்தான். தந்தைகளுக்கு இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உள்ளதா என்பது சந்தேகமே. நாம் வேறு விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். நாம் வேலை செய்வது, இலக்குகளை அடைவது என இருக்கிறோம். ஆனால் தாய்மார்கள், 'இது என் குழந்தை, இதுவே எனக்கு முதல் முன்னுரிமை' என்று சொல்வது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். அதனால்தான் நமக்கு முதல் நபராக அம்மா தான் நினைவுக்கு வருவார்.
ஆராத்யா விஷயத்தில் முழு பெருமையும் ஐஸ்வர்யாவிற்கே சேரும்" என்று ஐஸ்வர்யாவைப் புகழ்ந்துரைத்தார். ஆராத்யாவுக்கு சமூக வலைத்தள கணக்குகள் எதுவும் இல்லை, ஒரு ஃபோன் கூட இல்லை. அவள் மிக நல்ல மனசாட்சியுள்ள ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய தனிப்பட்ட குணத்திற்கும் இது ஒரு சான்றாகும். அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே இருக்கட்டும். ஒரு அற்புதமான இளம் பெண்ணாக வளர்ந்து வருகிறாள். அவள் எங்கள் குடும்பத்தின் பெருமை மற்றும் மகிழ்ச்சி.
நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நாள் முடிவில், ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்பத்துடன் வீட்டிற்கு வருவதுதான் முக்கியம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் ஆராத்யா பிறந்த இரவை நினைவு கூர்ந்த அபிஷேக், "அவள் என் முழங்கையின் மீது பொருந்திவிடுவாள். ஆனால் இப்போது ஆராத்யா ஐஸ்வர்யாவை விட உயரமாக வளர்ந்துவிட்டாள்" என்று புன்னகைத்தார்.
தற்போது தனது வரவிருக்கும் படமான 'காளிதர் லாபதா' (Kaalidhar Laapata) திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அபிஷேக், இடிடைம்ஸ் (ETimes) உடனான நேர்காணலில், ஐஸ்வர்யா உடனான பிரிவினை வதந்திகள் குறித்தும் பேசினார். "மக்களுக்கு கணினித் திரைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு, எங்களைப் பற்றித் தெரியாமல், மனதைப் புண்படுத்தும் விஷயங்களை எழுதுவது மிகவும் எளிதாக இருக்கிறது. இது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மொத்தத்தில், அபிஷேக் பச்சன் தனது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்பதையும், ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவுடனான அவரது பிணைப்பு மிகவும் வலுவானது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.