அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். அப்போது, "தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று" ஒரே ஒரு வார்த்தையை தான் தமிழிசை சொன்னார். அதன்மூலம், கடந்த எட்டு வருடங்களும் மேலாக மீடியா வாசமே இல்லாமல் இருக்கும் அஜித்தை நீண்ட நெடிய அறிக்கையை கொடுக்க வைத்துவிட்டார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக அஜித் கூறியிருப்பது, "இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு" என்பது தான்.
இதன்மூலம், அரசியலில் தனக்கு கொஞ்சம் கூட நாட்டமில்லை என்பதை தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்.
ஆனால், 9 வருடங்களுக்கு முன்பு இதே அஜித் அரசியல் குறித்து சொன்ன கருத்தும், இரண்டு வருடங்களுக்கு முன்பு, நடிகர் ஆரி அஜித்தின் அரசியல் குறித்து சொன்ன வார்த்தைகளும் தான் குழப்புகின்றன.
கடந்த 2010ம் ஆண்டு அஜித் அளித்த பேட்டி ஒன்றில், "அரசியல் இல்லாத ஒரு இடம் கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜித் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?" என்று குறிப்பிட்டு இருந்தார். இதைக் கூட ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், நடிகர் ஆரி சொன்ன தகவல் தான் அடேங்கப்பா ரகம்...
கடந்த 2017ம் ஆண்டு ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் 'நெடுஞ்சாலை' ஆரி, 'அஜித்துடன் இருந்தவர்கள் என்னிடம் சொன்ன விஷயம் இது... "இந்த தமிழ்நாட்டோட மொத்த வளர்ச்சி திட்டங்களுக்கான வரைப்படத்தை அஜித் தயார் செய்து வைத்திருக்கிறார். வெளிநாட்டில் உள்ளது போல, தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் போன்ற பல விஷயங்களை அஜித் ஒர்க் அவுட் செய்து வைத்திருக்கிறார். ஆனால், அஜித் இதை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறார்" என்று மேடையில் அத்தனை திரை பிரபலங்கள் இருக்கும் போது தெரிவித்தார்.
இப்போது, தல அஜித், 'வாக்களிப்பதோடு என் அரசியல் கடமை முடிந்துவிட்டது' என தெளிவாக கூறியிருக்கும் நிலையில், ஆரி பேசியதை குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.