நடிகர் யோகி பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாக வலை பேச்சு பிஸ்மி கொளுத்திப் போட, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
நடிகர் யோகி பாபுதான் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு கூறினார் என்றும் நாங்கள்தான் ஊடக தர்மத்தின் அடிப்படையில், அஜித் குமாரின் பெயரை மறைத்துவிட்டு, யோகி பாபுதான் கூறினார் என்பதையும் மறைத்துவிட்டு கூறினோம் என்று பிஸ்மி கூறினார். இதனால், சினிமா வட்டாரத்தில் அனைவராலும் புகழப்படும் நடிகர் அஜித்குமார், நடிகர் யோகி பாபுவை டோண்ட் டச் மி என்று தீண்டாமை சிந்தனையுடன் நடந்துகொண்டாரா என்ற கேள்விகள் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், உண்மையிலே அஜித் அப்படி நடந்துகொண்டாரா என்ற கேள்விகள் எழுந்தன.
அஜித் மீதான இந்த வதந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்களின் ரசிகர்களுக்கு கை கொடுப்பது, அவர்களை கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவையாக வலம் வரும் நடிகர் யோகி பாபு, நடிகர் அஜித் உடன் வேதாளம் மற்றும் வீரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார், நடிகர் யோகி பாபுவிடம் தீண்டாமை கடைபிடித்தாரா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நடிகர் யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில், “வேதாளம் படத்தின் படப்பிடிப்பின்போது மொட்டை ராஜேந்திரன் உடன் தான் அமர்ந்துள்ளதை அஜித்குமார் தனது கேமராவில் ஃபோட்டோ எடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், இது எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். மைடியர் தல, அஜித்குமார் சார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித் டோண்ட் டச் மி என்று கூறினார் என்று நடிகர் யோகி பாபு கூறியதாக, யூடியூபர் பிஸ்மி கொளுத்திப்போட்ட விஷயம் சமூக வலைதளங்காளில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த நேரத்தில், நடிகர் யோகி பாபு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பிரபல யூடியூபர் ஒருவர் தன்னைப் பற்றி தவறான தகவல் ஒன்றை பேசியதாகவும், அதை அறிந்த யோகிபாபு உடனடியாக அந்த யூடியூபரை தொடர்புகொண்டு பேசியதாகவும் அது போன்ற ஒரு நிகழ்வு நடைபெறவில்லை என்று விளக்கியிருக்கிறார். இதற்கு, அந்த யூடியூபர், இந்த விஷயத்தை ஒரு இயக்குனர் கூறியதாகத் தெரிவித்தார் என்று யோகி பாபு கூறினார். இதையடுத்து, யோகி பாபு அந்த இயக்குனரைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் அதற்கு அந்த இயக்குனர் தான் அப்படி ஒரு விஷயத்தைப் பேசவே இல்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து யோகி பாபு, மீண்டும் அந்த யூடியூபரை தொடர்புகொண்டு, நீங்கள் கூறிய இயக்குனர் உங்களிடம் அப்படி ஒரு விஷயத்தைக் கூறவே இல்லையாமே, வேண்டுமானால், கான்ஃபிரன்ஸ் கால் போட்டு பேசுகிறேன் நீங்களே கேளுங்கள் என்று யோகி பாபு கூறியிருக்கிறார். இதற்கு பிறகு, பொய் பேசமுடியாது என்று தெரிந்துகொண்ட அந்த யூடியூபர், நீங்கள் எங்களை கவனிக்கவே மாட்டேங்குறீங்களே சார், என்று அவர் பணத்தை எதிர்பார்ப்பது யோகி பாபுவுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில்தான், நடிகர் அஜித் டோண்ட் டச் மி என்று கூறினார் என்று நடிகர் யோகி பாபு கூறியதாக, யூடியூபர் பிஸ்மி கூறியதாக ஒரு சர்ச்சை பற்றி எரியத் தொடங்கியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் அஜித் குமாரை பேட்டி எடுத்த பிரபல வி.ஜே. விஜயசாரதி, அஜித் அப்படிப்பட்டவர் இல்லை. அதற்கு நானே சாட்சி என்று அவர் அஜித்தை பேட்டி எடுத்தபோது நடந்த சம்பவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த பேட்டிக்கு வந்த அஜித், அரங்கில் நுழைந்ததும், அங்கு இருந்த கேமிராமேன், உதவியாளர், டிராலி தள்ளுபவர், கலை வடிவம் & உதவியாளர், ஆன்லைன் எடிட்டர், அரங்க உதவியாளர், பாதுகாவலர்கள், ஆபீஸ் பாய் அனைவருக்கும் கை குலுக்கி பேசியதை நான் பார்த்தவன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமார் தனது படங்களின் புரோமோஷனுக்கே வராதவர், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டார். நட்சத்திர கலை நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தவர். அவர் மீது வேண்டும் என்றே இப்படியான வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், நடிகர் அஜித் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் அஜித்குமார் 234 கி.மீ வேகத்தில் காரை இயக்குகிறார். இந்த வீடியோவானது, விடாமுயற்சி படப்பிடிப்பின்போது, எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“