சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடிகர் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் சினிமா மட்டுமல்லாமல் பைக் ரேஸ், ஃபார்முலா கார் ரேஸ், விமானப் பயிற்சி என்று பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். பைக் ரேஸ், ஃபார்முலா கார் ரேஸ் விளையாட்டுகளில் குறிப்பிடத் தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை திரைப்படப் பணிகள் கொரோனா பொதுமுடக்க காலத்தில் முடங்கி இருந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வலிமை அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.
அண்மையில், தனது துப்பாக்கி லைசென்ஸை புதுப்பிக்க டாக்ஸி டிரைவரால் முகவரி மாறி கமிஷனர் அலுவலகம் சென்றபோது அப்போது காவலர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/ajith-won-medal-2-300x167.jpg)
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடிகர் அஜித் குமார் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.
46வது தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் மார்ச் 3ம் தேதி முதல் 5 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் 900 துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில், சென்னை ரைஃபில் கிளப் சார்பில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், நடிகர் அஜித் குமார் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதே போல, செண்டர் ஃபயர் பிஸ்டல் 32 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் அணியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு செண்டர் ஃபயர் பிஸ்டல் 32 (என்.ஆர்) 25 மீட்டர் அணியில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். மேலும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் 22 (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீட்டர் அணியில் தங்கப் பதக்கமும் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் 22 (என்.ஆர்) 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் அணியில் வெள்ளிப் பதக்கமும் அஜித் வென்றுள்ளார். அதோடு, ஃப்ரீ பிஸ்டல் 22 (என்.ஆர்) 50 மீட்டர் அணியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் 4 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Ajith-won-medals-in-shooitings-300x167.jpg)
நடிகர் அஜித் குமார் துப்பாகிச் சுடுதல் போட்டியில் வென்று பதக்கங்களை குவித்திருப்பதை அவருடைய ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"