நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவரது மேலாளரான சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் அஜித்குமார், "இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மோட்டார் ஸ்போர்ட் என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது. என்னை காண்பதற்காக நிறைய ரசிகர்கள் நேரில் வருகை தந்துள்ளனர். மிகவும் உணர்ச்சிவசமாக உணர்கிறேன்.
என் ரசிகர்களிடம் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன், மன நிம்மதியாக வாழ நான் எப்போதும் கடவுளை பிரார்த்திப்பேன். உங்கள் குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். நமக்கு பிடித்தமான விஷயங்களில் ஈடுபடும் போது வெற்றிபெற்றால் மகிழ்ச்சி தான்.
ஆனால், தோல்வி அடைந்தால் சோர்ந்து விடாதீர்கள். வெற்றிபெறுவதை விட பங்கேற்பது மிக முக்கியம். தன்னம்பிக்கையை எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள். என் ரசிகர்கள் அனைவரையும் அளவுக் கடந்து நேசிக்கிறேன்.
மற்ற விளையாட்டு போட்டிகள் போன்று இந்த கார் பந்தயம் தனி நபர் சார்ந்தது இல்லை. இதில் ஒரே வாகனத்தை 3 முதல் 4 ஓட்டுநர்கள் கையாள்வார்கள். அதனால், எல்லோரது பணியும் மற்றவரையும் சார்ந்து இருக்கும். வாகனத்தையும் பாதுகாக்க வேண்டும். சரியான நேரத்தில் இலக்கை அடைய வேண்டும்.
சினிமா துறையை போலவே இதிலும் பலரது உழைப்பும் சேர்ந்து இருக்கிறது. எல்லோரும் அவர்களது கடமையை சரியாக செய்தாலே போதும், முடிவுகள் தானாக வரும். எனது ரசிகர்களுக்கு மீண்டும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து யாருடனும் சண்டையிடாதீர்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.