/indian-express-tamil/media/media_files/2025/07/06/anandraj-celbpoh-2025-07-06-15-12-22.jpg)
நடிகர் ஆனந்தராஜ், தான் ஏற்று நடிக்கும் வில்லன் கதாபாத்திரங்களே தனது மனைவிக்கு பிடித்தமானது என்று கூறியுள்ளார். சினி உலகம் யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது இந்த சுவாரஸ்ய தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு நடிகர் ஆனந்தராஜை காமெடியனாக மட்டுமே தெரியும். ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு தான், அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்று புரியும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஆனந்தராஜ். குறிப்பாக, ரஜினிகாந்த் முதல் விஜயகாந்த் வரை முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லனாக ஆனந்தராஜ் நடித்திருக்கிறார்.
இது தவிர சில படங்களில் ஹீரோவாகவும் ஆனந்தராஜ் நடித்துள்ளார். சில படங்களில் ஒரே ஒரு சண்டைக் காட்சியில் மட்டும் கூட தோன்றி இருக்கிறார். இவரின் நடிப்பை பார்த்து ஆச்சரியமடைந்த ரஜினிகாந்த், பாட்ஷா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆனந்தராஜை அழைத்துள்ளார். இவரது திறமைக்கு இப்படி பல உதாரணங்களை கூறலாம்.
ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் சிலரை பார்த்து பழகிய பின்னர், அவர்களை மாறுபட்ட கதாபாத்திரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வது கடினம். ஆனால், இதற்கு நடிகர் ஆனந்தராஜ் விதிவிலக்கு. இவரை என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் திரையில் பார்த்தாலும் மக்கள் ரசிக்கின்றனர். அந்த அளவிற்கு மக்களுக்கு பிடித்த கலைஞராக ஆனந்தராஜ் விளங்குகிறார்.
இந்நிலையில், சினி உலகம் யூடியூப் சேனலுக்கு நடிகர் ஆனந்தராஜ் சமீபத்தில் நேர்காணல் அளித்தார். அதில், சினிமாவில் தன்னை வில்லனாக பார்ப்பதையே தனது மனைவி விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "நான் ஹீரோவாக நடிப்பது நன்றாக இருக்குமா? அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்குமா? என்று நடிகர் சிவகுமார், என்னுடைய மனைவியிடம் கேட்டிருக்கிறார். நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது தான் தனக்கு பிடிக்கும் என்று எனது மனைவி பதிலளித்தார். இதற்கான காரணத்தையும் அவர் கேட்டுள்ளார்.
அப்போது, 'வில்லனாக நடிக்கும் போது எனக்கு மட்டுமே என் கணவரை பிடிக்கும். ஆனால், ஹீரோவாக நடித்தால் எல்லோருக்கும் பிடித்தவராக மாறிவிடுவார்' என்று என் மனைவி கூறியுள்ளார்" என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.