நடிகர் அருண் விஜய் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் தவறான தகவலைப் பரப்பிய பிரபல யூடியூப் சேனல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவரான விஜயகுமார், ஆரம்பத்தில், கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வந்தார். பின், குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி சினிமா என 400 படங்களுக்கு மேல் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜயகுமார் 1969-ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியருக்கு கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பின்னர், விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை 1976-ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.
நடிகர் விஜயகுமார் பிள்ளைகளில் அருண் விஜய் தந்தையை போல சினிமாவில் நடித்து வருகிறார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.
வணங்கான் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படம் அருண் விஜய்க்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கும் திலன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜயகுமாரின் மகள்கள் கவிதா, ப்ரீத்தா, மகன் அருண் விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விஜயகுமார் பேத்தி தியா திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தவறான தகவலை பரப்பிய பிரபல யூடியூப் சேனல் மீது அவரது வழக்கறிஞர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 'தன்னை பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான கருத்துக்களை தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தவறான தகவல்களை பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“