மெய்யழகன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி, “உண்மையில் என்னைப் பற்றி தெரிந்தால், யாரும் என்னப்போல் மாப்பிள்ளை வேண்டும் என ஆசைப்படமாட்டார்கள்” என ஜாலியாக கூறியுள்ளார்.
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படம், கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. ‘96’ திரைப்படம் வெளியான பிறகு, பல பள்ளிகளில் முன்னாள் மாணவ, மாணவியர்கள் – ஆசிரியர்கள் சந்திப்புகள் நடைபெற்றன.
‘96’ வெற்றிப் படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் பிரேம்குமார், நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது கார்த்தியின் 27வது படம். இந்த படத்தில், கார்த்தியுடன் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில், ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர்.
மெய்யழகன் படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மெய்யழகன் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் அண்மையில் வெளியானது. அதில், ‘நான் போகிறேன்’ மற்றும் ‘யாரோ இவன் யாரோ’ என்ற இரண்டு பாடல்களையும் நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். மெய்யழகன் படத்தில் கமல்ஹாசன் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், மெய்யழகன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (செப்டம்பர் (14) இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது;
“ரொம்ப அழகான இந்தக் கதையில் நடிக்கவும், அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றிகள். இந்தக் கதையைப் படித்ததும் இது என் வாழ்வில் நடந்த கதை என்று நினைத்தேன். என் வாழ்வில் நடந்த, இன்னும் என்னை பாதித்துக் கொண்டிருக்கும் கதை இது. படம் வெளியானப் பிறகு இதைப் பற்றி நான் விரிவாகப் பேசுகிறேன்.
இந்தப் படத்தில் நான் ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்தேன். கார்த்தியும் நானும் ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டோம் என்று நம்புகிறேன். என் சகோதரர் கார்த்தி. அந்த அளவிற்கு நாங்கள் இந்தப் படத்தின் மூலம் பழகியிருக்கிறோம். இந்தப் படம் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் படமாக இருக்கும்.
திரைப்படங்களில் ஒருவர் ஏற்கும் கதாபாத்திரத்தை வைத்து அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்துவிடுகிறார்கள். அப்படிதான் முதலில் நான் செய்த கதாப்பாத்திரங்களை வைத்து என்னைப் போல் மாப்பிள்ளை வேண்டுமென பேசத் தொடங்கினார்கள். ஆனால், உண்மையில் என்னைப் பற்றி தெரிந்தால் யாரும் அப்படி ஆசைப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். அப்போது, இளம் பெண்கள் பலரும் அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், நடிகர் அரவிந்த் சாமி, உண்மையில் என்னைப் பற்றி தெரிந்தால் யாரும் அப்படி ஆசைப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்” என ஜாலியாகப் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“