/indian-express-tamil/media/media_files/2025/06/17/CiwPtxCHZDxhAmm67BlH.jpg)
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்கள் வரிசையில் நடிகர் அதர்வாவிற்கு கணிசமான ரசிகர் வட்டம் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக, 'ஈட்டி', 'ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்' போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலும் 'பரதேசி' உள்ளிட்ட தனித்துவமான திரைப்படங்களிலும் தனது முத்திரையை அதர்வா பதித்துள்ளார்.
அந்த வகையில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடித்துள்ள 'டி.என்.ஏ' திரைப்படம் வரும் ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கலட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு நடிகர் அதர்வா நேர்காணல் அளித்துள்ளார். அப்போது, முதன்முறையாக தனது தந்தையும், நடிகருமான முரளி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்து அதர்வா பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "என்னுடைய முதல் திரைப்படம் வெளியான குறுகிய நாட்களிலேயே என் தந்தை இறந்துவிட்டார். அதன் பின்னர், அடுத்தகட்ட நகர்வு என்னவென்று தெரியாமல் இருந்தேன். ஏனெனில், ஒவ்வொரு முடிவையும் எனது தந்தையை கேட்டு எடுக்கும் பழக்கத்தை கடைபிடித்தேன்.
நான் மட்டுமல்ல, என் குடும்பத்தினர் அனைவருமே அப்போது பாதிக்கப்பட்டோம். அந்த சூழலில் தான், நாம் வாழும் இந்த வாழ்க்கை நிச்சயமற்றது என்று தெரிந்து கொண்டேன். ஒரு குறிக்கோள் கொண்டு அதை நோக்கி பயணிப்பது நல்லது தான். அதே சூழலில் நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் மறந்து விடக் கூடாது.
அதனால், இருக்கும் வரை மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தற்போது வரை நான் இருக்கிறேன். திரைத்துறைக்கு வந்த போது, ஒரு ஹீரோவாக உணர்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. காரணம், என்னுடைய சொந்த வாழ்விலும் அப்போது நிறைய விஷயங்கள் நடந்தன. அவை, மற்ற விஷயங்கள் குறித்து என்னை யோசிக்க விடவில்லை" என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.