/indian-express-tamil/media/media_files/2025/06/22/atharva-pressmeet-2025-06-22-13-24-40.jpg)
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'டி.என்.ஏ' திரைப்படம், கோவை பிராட்வே திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நெல்சன் வெங்கடேசன் மற்றும் அதர்வா ஆகியோர் இந்த திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் உரையாடினர். மேலும், செய்தியாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அதர்வா, "குடும்பத்தினருடன் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஆக்ஷன் படங்கள் மிகவும் பிடிக்கும், ஆக்ஷன் காட்சிகளை விரும்பி செய்வேன். இந்த படத்தில் ஆக்ஷனைத் தாண்டி காதல் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு பல காட்சிகளை எடுத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு ஏற்ற நேரத்தில் தான் அந்தக் காட்சிகளை எடுக்க முடிந்தது.
தற்போது 'பலே' என்ற படத்தை முடித்திருக்கிறேன். அது தவிர, 'பராசக்தி' மற்றும் 'இதயம் முரளி' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். 'இதயம் முரளி' என்ற படத்தின் பெயரே எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது ஒரு நல்ல திரைப்படமாக அமையும்.
சில படங்களை பான் இந்தியா படங்களாகவே எடுக்கிறோம். சில படங்கள் தானாகவே பான் இந்தியா ஆகிவிடுகின்றன. அதனால், மொழித் தடை உடைவதை ஒரு நல்ல விஷயமாகவே கருதுகிறேன்" எனக் கூறினார். மேலும், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அதர்வா தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், "வெகுஜன மக்களின் ரசனைக்கு அருகில் இருக்க வேண்டும் என்று யோசித்து இந்த படத்தை எடுத்தோம். திரையரங்குகளில் பார்வையாளர்களை பார்க்கும் பொழுது இதை உணர முடிகிறது. என்னுடைய திரைப்படத்தை கோவையில் பார்ப்பது இதுதான் முதல் முறை. திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு மொபைல் போன் ஒரு மிகப்பெரிய கவனச்சிதறலாக அமைகிறது. சமூக வலைதளங்களில் 30 நொடி என்டர்டெயின்மென்ட் வீடியோவிற்கு நாம் பழகி விட்டோம். எனவே, முழு படத்தையும் பார்ப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுத்திருக்கிறோம்.
தற்போதுள்ள இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்களில் இருந்து வெளியில் வந்து படங்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
செய்தி - பி. ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.