/indian-express-tamil/media/media_files/2025/08/02/actor-comedian-madhan-bob-passes-away-at-71-due-to-cancer-tamil-news-2025-08-02-20-24-33.jpg)
நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மதன் பாப் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். சென்னையில் அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ் சினிமா இதுவரை ஏராளமான நகைச்சுவை நடிகர்களை கண்டிருக்கிறது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர் மதன் பாப். இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய மதன் பாப் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து நடிகராக முத்திரை பதித்தார். குறிப்பாக தனது தனித்துவமான சிரிப்பு, நடிப்பு மூலம் முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் மதன் பாப் நடித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரை கொண்டவர் மதன் பாப், இசைத்துறை முத்திரை பதிக்க ஆவல் கொண்டார். அதற்கு ஏற்றார் போல் இசையையும் கற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை பணியாற்றி இருக்கிறார் என்பதை அவரே விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருப்பார்.
இதேபோல், சார்பட்டா பரம்பரை படம் என்பது தங்களது வாழ்க்கை தான் என்றும், தானும் ஒரு பாக்ஸராக பயிற்சி பெற்றதாகவும், அந்தப் படத்தில் வரும் கேரக்டர்கள், கோச்சுகள் எனப் பலருடனுடம் தான் வாழ்ந்ததாகவும் கூறியிருப்பார். இதுபற்றி அவர் இயக்குநர் ரஞ்சித்திடம் கூறியது போது, முன்பே சொல்லி இருந்தால் அவரை தனது படத்தில் நடிக்க வைத்திருப்பேன் என்றும் ரஞ்சித் கூறியதாக மதன் பாப் கூறியிருப்பார்.
இசையின் பக்கம் அவரது கவனம் இருக்க, காலம் அவரை நடிகராக மாற்றியது. மதன் பாப் பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து நடிப்பில் தனது கவனத்தை செலுத்தினார். அவர் நடிக்க தொடங்கியது முதல் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் பிசியாக வலம் வந்தார். விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.
ப்ரெண்ட்ஸ், ப்ரியமான தோழி, சுந்தரா ட்ராவல்ஸ், ஜெமினி, ரன், சந்திரமுகி, யூத், வில்லன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் அவர் நடித்து அசத்தி இருந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறையவே, சன் டி.வி-யில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அந்த நிகழ்ச்சியிலும் தனது முத்திரையான சிரிப்பு மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார். வளரும் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து பெரும் உந்துதலாகவும் அவர் இருந்தார்.
இப்படியான சூழலில் தான் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் சிகிச்சையும் எடுத்துவந்தார். இந்நிலையில், நீண்டகாலமாக புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துவந்த மதன் பாப் சிகிச்சை பலனின்றி அடையாறில் இருக்கும் அவருடைய இல்லத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது மறைவு தமிழ் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மதன் பாப்க்கு ஒரு மகள், மகன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.