கோவையைச் சேர்ந்த பிரபல நடிகர் குமாரசாமி என்கிற செந்தில், எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்தவர். காமெடியன், குணச்சித்திர நடிகன் என்று நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்.
பாக்யராஜ் தலைமுறை முதல் சிவா தலைமுறை வரை பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவரை, இயக்குநர் பாக்யராஜின் ஆஸ்தான நடிகர் என்றும் கூறலாம். பாக்யராஜே ஒரு முறை இதை மேடையில் கூறியுள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த செந்தில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருக்கு வயது 74. அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, “அவரது மறைவு திரைத்துறைக்கும் நடிகர் சமூகத்துக்கும் மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரதுஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 4ம் தேதி நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதனும், 5ம் தேதி வெள்ளை சுப்பையாவும் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தனர். ஒரே வாரத்தில் 3 நகைச்சுவை நடிகர்கள் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.