/indian-express-tamil/media/media_files/2025/09/15/dhanush-gv-2025-09-15-16-38-50.jpg)
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னை நேரு உள்வீளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் மட்டுமல்லாமல், திரைத்துறையின் பல முன்னணி பிரபலங்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்த படத்தை இயக்கியுள்ள தனுஷ், படத்தைப் பற்றியும், அதன் தலைப்புக்கான காரணம் பற்றியும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடனான தனது பயணம் பற்றியும் இந்த விழாவில் பேசினார். விழாவில் பேசிய தனுஷ், “எனது சிறு வயதில் இட்லிக் கடை எனது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம். சிறுவயதில் எங்களிடம் இட்லி வாங்கக்கூடப் பணம் இல்லை. அதனால், நானும் எனது சகோதரி மற்றும் உறவினர்களும் வயல்களில் உள்ள பூக்களைச் சேகரித்து, அதை விற்றுப் பணம் சேர்த்தோம்.
அதற்காக நாங்கள் தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து இந்த வேலையைச் செய்வோம். அப்படிச் சம்பாதித்த பணத்தில் நாங்கள் வாங்கிய 4-5 இட்லிகளின் சுவையை என்னால் மறக்கவே முடியாது. அந்த இட்லிக் கடைக்கு நான் செலுத்தும் காணிக்கைதான் இந்தத் திரைப்படம்” என்று உணர்வுபூர்வமாகப் பேசினார். தொடர்ந்து, ‘இட்லி கடை’ படத்தின் கதைக்களம் குறித்துப் பேசிய தனுஷ், “ஒரு இட்லிக் கடையை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என யோசித்தேன்.
இது ஒரு கடையின் கதை மட்டுமல்ல; நான் வளர்ந்த கிராமம் மற்றும் எனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சில சுவாரஸ்யமான உண்மை கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு கதை. அந்தக் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளை வைத்து, ‘இட்லி கடை’ படத்துக்காக ஒரு புனைகதையை உருவாக்கினேன். இது நமது கலாசாரம் மற்றும் எனது வேர்களைப் பற்றிய ஒரு படம்” என்று விளக்கமளித்தார்.
‘இட்லி கடை’ திரைப்படம், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இவர்களின் 9வது கூட்டணியில் வந்துள்ள படம். படத்தின் இசை குறித்துப் பேசிய தனுஷ், “இந்த ‘இட்லி கடை’ கதையை நான் ஜி.வி. பிரகாஷிடம் சொன்னபோது, ‘இந்தப் படத்துக்கு கொஞ்சநாள் மட்டும் பிரபலமான பாடல்களை நான் இசையமைக்க மாட்டேன்’ என்று முன்பே சொல்லிவிட்டார். ஒரு சில மாதங்கள் மட்டும் யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பாடல்களை உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். படம் வெளியானவுடன், பாடல்களே பேசும் அளவுக்கு நான் மென்மையான இசையைத் தருவேன் என்று என்னிடம் ஜி.வி. பிரகாஷ் சொன்னார்.
படம் மற்றும் ஜி.வி. பிரகாஷின் அசல் இசையின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாராட்டிய தனுஷ், “இந்தக் காலத்தில் ஒரு இசையமைப்பாளர் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். யாரேனும் ட்ரெண்டிங்கான பாடல்களை உருவாக்கலாம். ஆனால், தனது மெலடி மீது உறுதியான நம்பிக்கை கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்” என்று கூறினார்.
இந்த நிகழ்வின் போது, ஆன்லைன் ட்ரோலர்கள் பற்றியும் பேசிய தனுஷ் வெறுப்பவர்கள் என்று யாரும் இல்லை என்று நான் நம்புகிறேன். இந்தக் காலத்தில் எல்லோரும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். ஒரு 30 பேர் தங்களின் பிழைப்புக்காக 300 போலி ஐடிகள் மூலம் தவறான தகவலைப் பரப்பக்கூடும். உண்மையில், அவர்கள் அந்தப் படத்தைப் பாராட்டக்கூடும், ஆனால் அந்தப் போலி ஐடிக்களில் வரும் பதில் வேறு மாதிரியாக இருக்கலாம். மக்கள் அன்பைப் பரப்பினால், அதுவே அவர்களுக்குத் திரும்பி வரும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
பவர் பாண்டி’, ‘ராயன்’ மற்றும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படங்களுக்குப் பிறகு, தனுஷ் இயக்கும் 4-வது படம் ‘இட்லி கடை. இந்தப் படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் அக்டோபர் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us