/indian-express-tamil/media/media_files/2025/10/14/harish-kalyan-2025-10-14-13-12-24.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருப்பார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து ‘அரிது அரிது’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்த ஹரிஷ் கல்யாணுக்கு ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தது . அதுமட்டுமல்லாமல், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைஸா நடித்திருந்தார். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா தயாரித்து இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் சினிமா கேரியருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இதையடுத்து, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து ‘ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹரிஷ் கல்யாண், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டார். இவர் தற்போது இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ‘டீசல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கே.பி.ஒய் தீனா, அபூர்வா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். வினய் இந்த படத்தில் வில்லனாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட ’டீசல்’ திரைப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ’டீசல்’ படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “டீசல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, நாங்கள் இரண்டு , மூன்று நாட்கள் கடற்கரைக்குச் சென்றோம். கடலுக்குள் கூடச் சென்றோம். அப்போது 70 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவர் என்னிடம் ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். புயலால் கடலில் 48 நாட்கள் சிக்கியதாகவும் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறினார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.