பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இன்று (நவ.2) காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
ரகு என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரைத்துறையில் ஜூனியர் பாலையா என்று அழைக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
இவரது நடிப்பு தனித்து தெரிந்தது. பாராட்டுகளும் குவிந்தன. 80-ஸ் படங்களில் நடித்திருந்தாலும் 90-ஸ், 20k-வை சேர்ந்தவர்களுக்கு இவரை சமுத்திரக் கனியின் சாட்டை படம் மூலம் நன்கு தெரிந்திருக்கும். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக நடித்து கலக்கி இருப்பார். இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தம்பி ராமையா உடன் இவர் வரும் காட்சிகள் ஆழமாக, அழகாக அமைக்கப்பட்டிருக்கும்.
தொடர்ந்து அஜித் நடித்து வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் உடன் இருக்கும் முதியவராக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார். இறுதியாக 2021-ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சினிமா தவிர்த்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (நவ.2) வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூனியர் பாலையா மறைவுக்கு திரைத் துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“