நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் 'மிஸ் தமிழ்நாடு' பட்டம் வென்ற பிரபல மாடல் தாரிணியை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெயராம் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் சீனியர் நடிகர். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராமின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். ஜெயராம் கடந்த 1992-ம் ஆண்டு மலையாள நடிகை பார்வதியை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெயராம் - பார்வதி தம்பதிக்கு காளிதாஸ் என்கிற ஒரு மகனும் மாளவிகா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், தனது 7 வயதிலேயே ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார்.
காளிதாஸ் ஜெயராம் 2016-ம் ஆண்டு 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற தமிழ் திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ‘பூமரம்’ என்ற மலையாளப் படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த 2 படங்களும் இவருக்கு ஒரு பெரிய பிரேக் எதுவும் தரவில்லை என்றாலும், இவர் திருநங்கையாக நடித்த 'நவரசா' வெப் தொடர் செம ஹிட் அடித்தது. இதில் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு பேசப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்த காளிதாஸ் ஜெயராம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். இதைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார், இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம், அண்மையில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் காதலித்து நிச்சயம் செய்துள்ள பெண் ஒரு பிரபல மாடல் ஆவார். 2019-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற தாரிணி காளிங்கராயர். காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமண நிச்சயதார்த்தத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காளிதாஸ் ஜெயராம் - தாரிணி நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள், நெட்டிசன்கள், பிரபலங்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். காளிதாஸ் ஜெயராம் - தாரிணி நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.