நடிகர் கார்த்தி தம்பி படத்தில் தனது அண்ணி ஜோதிகாவுக்கும் தனக்கும் ஆகவே ஆகாது என்றும் தனது அண்ணன் தன்னை சின்ன வயசுல நிறைய டார்ச்சர் பண்ணுவார் என்றும் தம்பி படத்தின் ஆடியோ லான்ச்சில் கார்த்தி ஜாலியாக பேசியுள்ளார்.
நடிகர் சூரியாவின் மனைவி நடிகை ஜோதிகாவும் சூரியாவின் தம்பி நடிகர் கார்த்தியும் ‘தம்பி’ படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். பாபநாசம் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் நடிகர் கார்த்தியை வைத்து தம்பி படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், நடிகர் கார்த்தியின் அண்ணி நடிகை ஜோதிகா அவருக்கு சகோதரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ‘தம்பி’ படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி சென்னை சத்தியம் சினிமாஸில் நடைபெற்றது. இந்தப் படத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “தம்பி படத்தைப் பற்றியும் இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றியும் பேசினார்.
இந்த மாதிரி ஒரு படத்தில் அண்ணியும் நானும் சேர்ந்து நடிப்போம் என்று கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க வில்லை. அண்ணியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவர்களுடைய அர்ப்பணிப்பு நேரந்தவறாமை. படத்தில் ஒரு காட்சியில் சிலம்பம் சுற்றுவது போல வருகிறது என்று சொன்னால் ஆறு மாதத்திற்கு முன்னாடியே சிலம்பம் கற்றுக்கொள்வார். உண்மையில் இந்தப் படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்திருப்பது நிச்சயமாக ஒரு ஆசிர்வாதம்தான்.
இந்தப் படத்தில் அண்ணி ஜோதிகாவுக்கும் எனக்கும் ரொம்ப சுவாரசியாமான காட்சிகள் இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கும் அண்ணிக்கும் ஆகவே ஆகாது. படத்தின் கிளைமேக்ஸில்தான் இரண்டு பேரும் இணைவோம்.
எப்போதுமே உறவுகளை அடிப்படையாகக் கொண்ட படங்களில் நடிப்பதுதான் நடிகர்களுக்கு சுகமானது. ஆக்ஷன், த்ரில்லர் படங்கள் பண்ணும்போது கேமிராமேனுக்கும், எடிட்டருக்கும், இசையமைப்பாளருக்கும்தான் சுகம். ஆனால், நடிகருக்கும் சுகம் கிடையாது.
குடும்ப படங்களில் நடிக்கும்போதுதான் நடிகர்களாக ஒரு உணர்வை பறிமாறிக்கொள்வது, அப்பாவா நடிக்கும்போது அப்பாவாக நினைப்பது, அம்மாவாக நடிக்கும்போது அம்மாவாக நினைப்பது என்பது நன்றாக இருக்கும்.
எனக்கு அக்கா என்றால் ரொம்ப பிடிக்கும். எங்கள் அண்ணன் சின்ன வயசுல என்னை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பார். அதனால், எனக்கு அக்கா ரொம்ப பிடிக்கும். அதனால், அது ஒரு ஸ்பெஷல்.
இந்தப் படத்தில்கூட பாரதி தம்பி எழுதிய ஒரு வசனம் உள்ளது. வீட்டில் ஒரு அக்கா இருந்தால், இரண்டு அம்மா இருப்பதற்கு சமம் என்று எழுதியுள்ளார். ரொம்ப அர்த்தப்பூர்வமானது.
அதே போல, இந்தப் படத்தில் சத்தியராஜ் நடித்துள்ளார். நான் சின்ன பையனாக இருக்கும்போது அவர் என்னை பைக்கில் அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி தருவார். அவருடன் சேர்ந்து நடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதம்.
சத்தியராஜ் மாமா மாதிரி உடலையும் மனதையும் வைத்துக்கொள்ள வேண்டும். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். நான் ஸ்கூல் படிக்கும்போது கேட்ட ஒரு கதை. சத்தியராஜ் மாமா வீட்டில் ஒரு முறை திருடன் வந்து 5 லட்ச ரூபாய் திருடிக்கொண்டு போய்விட்டான். வீட்டில் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள். இதை வீட்டில் இருந்தவர்கள் சத்தியராஜ் மாமாவிடம் கூறியபோது, இருந்ததினாலதானே அடிச்சுக்கிட்டுப் போனான். விடு.” என்று ஜாலியாக சொல்வார் என்று இந்தப் படத்தில் நடித்ததைக் கூறினார்.
தம்பி படத்தை வயாகம் 18 ஸ்டுடியோஸ் பாரலல் மைண்ட்ஸ் புரோடக்ஷன் தயாரித்துள்ளது. இதில் கார்த்தி, ஜோதிகாவுடன் நடிகர் சத்தியராஜ், சீதா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிக்கிலா விமல் நடித்துள்ளார். 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.