மனித உரிமை காக்கும் கட்சி தலைவரும் தமிழ் சினிமா நடிகருமான கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக் தமிழ் சினிமா துறையில் 90களிலும் 2000த்தின் முதல் பாதி வரை முன்னணி நடிகராக வலம் வந்தார். நவரசநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கார்த்திக்கிற்கு வாய்ப்புகள் குறைந்ததால், படிப்படியாக திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட அவர் ஒரு கட்டத்தில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அனேகன் படத்தில் வில்லனாக நடித்தார். நடிகர் தற்போது, மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, கார்த்திக் அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், நடிகர் கார்த்திக்கிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"