/indian-express-tamil/media/media_files/2025/07/20/anbumani-kingkong-2025-07-20-19-50-02.jpg)
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக முன்னணி நடிகர் 'கிங்காங்' சங்கர் மகள் திருமணம் தான் பேசுபொருளாக இருந்தது. அந்த அளவிற்கு தனது மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக 'கிங்காங்' சங்கர் நடத்தினார். இந்நிலையில், மகள் திருமணம் தொடர்பாக சில விஷயங்களையும் அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக 'கிங்காங்' சங்கர் விளங்குகிறார். பெரும்பாலும் அனைத்து நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த பெருமை 'கிங்காங்' சங்கருக்கு இருக்கிறது. அந்த வகையில், பலருக்கு நேரில் சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து, அவர்களின் ஆசீர்வாதத்தை 'கிங்காங்' சங்கர் பெற்றார்.
இந்நிலையில், அது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதமாக ட்ரெண்டானது. இதற்காக பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். எனினும், இதற்கு சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த விமர்சனங்கள் ஒருகட்டத்தில் ட்ரோல்களாகவும், தனி மனித தாக்குதலாகவும் மாறியது. ஆனால், தமிழில் ரஜினிகாந்த் முதல் பாலிவுட்டில் ஷாருக்கான் வரை அனைத்து நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ஒரு முன்னணி நடிகர், நிச்சயம் இவ்வளவு பேருக்கு பத்திரிகை வைக்க வேண்டும் என்று பலர் ஆதரவு குரல்களையும் வெளிப்படுத்தினர்.
சினிமா மட்டுமின்றி அ.தி.மு.க-வில் நட்சத்திர பேச்சாளராக 'கிங்காங்' சங்கர் இருந்ததாக அவரே கூறி இருக்கிறார். இதனால், அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கும் 'கிங்காங்' சங்கர் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். எனினும், கட்சி பேதமின்றி முதலமைச்சர் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கும் 'கிங்காங்' சங்கர் சார்பில் பத்திரிகை கொடுக்கப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 'கிங்காங்' சங்கர் மகள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக, மனம் திறந்து சில விஷயங்களை 'கிங்காங்' சங்கர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், மொத்தமாக 1250 பத்திரிகைகள் கொடுத்ததாக 'கிங்காங்' சங்கர் கூறியுள்ளார். இவ்வளவு பத்திரிகைகள் வைத்து அதன் மூலம் கிடைக்கும் அன்பளிப்பிற்கு ஆசைப்படுவதாக சிலர் விமர்சனம் முன்வைத்தது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது என்று 'கிங்காங்' சங்கர் கூறுகிறார்.
மேலும், அன்புமணி ராமதாஸுக்கு பத்திரிகை கொடுக்க சென்ற வீடியோ முதலில் இணையத்தில் ட்ரெண்டானது. இதனை, இயல்பாக நடந்த நிகழ்வு என்று 'கிங்காங்' சங்கர் விவரித்துள்ளார். குறிப்பாக, அன்புமணிக்கு அழைப்பிதழ் கொடுத்த போது மாம்பழமும் சேர்த்து கொடுக்கப்பட்டது பேசுபொருளானது. ஆனால், அந்த நேரத்தில் மாம்பழ சீசன் என்பதால் அதனை வாங்கிச் சென்றதாக 'கிங்காங்' சங்கர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பா.ம.க-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தது, அனைவரது கனவத்தையும் ஈர்த்ததாக 'கிங்காங்' சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர மகளின் திருமணத்தில் தனது உறவினர்கள் மட்டுமல்லாமல் சொந்த ஊர் மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், தனியாக பேருந்து வசதியையும் 'கிங்காங்' சங்கர் ஏற்படுத்தி இருந்தார். இவரது மகள் திருமணம் முடிந்த பின்னரும், பல பிரபலங்கள் மணமக்களின் வீடு தேடி சென்று வாழ்த்து கூறுவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.