நகைச்சுவை நடிகர் குள்ளமணி 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2013-ல் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சினிமா சிலருக்கும் ஏற்றத்தையும், பலருக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கும். குறிப்பாக துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் எத்தனை படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு அங்கீகாரமும், பொருளாதாரமும் பெரிய அளவில் கிடைப்பதில்லை.
அப்படி 500-க்கும் அதிகமான படங்களில் நடித்து கவனம் பெற்ற நகைச்சுவை நடிகர் குள்ளமணி. இவர் தனது இறுதி காலத்தில் அரசு மருத்துவமனையில் திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாமல் இருந்ததுதான் சோகம். பல படங்களில் நடித்துள்ள இவருக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற ஒரு மகளும் உள்ளனர். ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் "பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம்" என்ற நகைச்சுவை மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/8w1RKm6jG7YK9HQzSYDH.jpg)
சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்து, அதன்பின் திரையுலகிற்கு வந்தவர். ’கரகாட்டக்காரன்' படத்தில் வரும் இவரது காமெடி காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு முன்பே இவர், நவாப் நாற்காலி, வசந்தத்தில் ஓர் நாள், பொய் சாட்சி, இன்று போய் நாளை வா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், கரகாட்டக்காரன் திரைப்படம் தான் இவரை புகழடையச் செய்தது.
ரஜினி, கமல், ராமராஜன், செந்தில், கவுண்டமணி, சத்யராஜ், உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார் குள்ளமணி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரின் குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு பாய்ஸ் நாடக குழுவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர், ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார். பின் திரைத்துறையில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் சோகம் என்னவென்றால் அவர் நடித்த பாதி படங்களுக்கு சம்பளமே கொடுக்கவில்லையாம்.
அந்த பணம் கிடைத்து இருந்தால் கூட அவருடைய வாழ்க்கை நன்றாக இருந்திருக்கலாம் என்று உடன் இருந்தவர்கள் கூறி இருந்தார்களாம். "இன்று தருகிறேன், நாளை தருகிறேன்" என சொல்லி காலம் கடத்தியதால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். இறுதியில் கடந்த 2013-ம் ஆண்டு கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நடிகர் குள்ளமணி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/19/JL4gj8gCQKW2SUumbrJK.jpg)
500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தபோதும், அவருக்கு நடிகர் சரத்குமாரை தவிர வேறுயாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இவருடைய மறைவுக்கு பின் கூட பிரபலங்கள் யாரும் எட்டி பார்க்கவில்லை என்பதுதான் வேதனை.