/indian-express-tamil/media/media_files/2025/04/05/IA2uO3w4QG7EOXDP4I0N.jpg)
என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை நடிகர் மாதவன் முன்வைத்துள்ளார். குறிப்பாக, இவற்றை எல்லாம் முடிவு செய்பவர்கள் யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், பாடத்திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் என்.சி.இ.ஆர்.டி-யின் 7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாற்று குறிப்பு நீக்கப்பட்டது.
இந்த பாடங்களுக்கு பதிலாக உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா மற்றும் மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாற்று குறிப்புகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், சமீபத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நடிகர் மாதவன் நேர்காணல் அளித்தார். அப்போது, என்.சி.இ.ஆர்.டி தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மாதவன் பதிலளித்தார். அதன்படி, "நான், பள்ளியில் வரலாற்று பாடங்கள் பயின்ற போது பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திர போராட்டம் குறித்து 4 பாடங்கள் இருந்தன. ஆனால், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் குறித்து ஒரே ஒரு பாடம் மட்டுமே இருந்தது.
ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை சுமார் 800 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால், சோழப்பேரரசு சுமார் 2,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்படி இருக்கும் போது பாடத்திட்டங்கள் குறித்து முடிவு செய்வது யார்? அவற்றை தீர்மானிப்பது யார்? உலகின் பழமையான மொழி தமிழ். ஆனால், அம்மொழி குறித்து யாருக்கும் தெரியாது.
எங்கள் கலாசாரத்தில் மறைந்திருக்கும் அறிவியல் அறிவு இப்போது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இதை சொல்வதால் எனக்கு பிரச்சனை ஏற்படலாம். ஆனாலும், இவற்றை நான் கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார். நடிகர் மாதவனின் பாடத்திட்டம் தொடர்பான இந்தக் கருத்துகள், கல்வித்துறை மட்டுமின்றி வரலாற்று ரீதியாகவும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.