/indian-express-tamil/media/media_files/2025/07/06/mgr-sivaji-classic-2025-07-06-15-59-57.jpg)
தமிழ் திரைத்துறையின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆகியோருக்கு இடையே இருந்த நட்பு குறித்து நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் விவரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அதில், "எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவருடனும் நான் பழகி இருக்கிறேன். இது குறித்து பல பொதுக்கூட்டங்களில் கூட நான் பேசி இருக்கிறேன். எம்.ஜி.ஆருடனான தனது உறவு குறித்து சிவாஜி கணேசன் சில தருணங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதன்படி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற எம்.ஜி.ஆரை, சிவாஜி நேரில் சென்று பார்த்து வந்த பின்னர், என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார்.
அப்போது, 'நாங்கள் இருவரும் சந்தித்த பின்னர், ஏறத்தாழ 15 நிமிடங்கள் பேசிக் கொள்ளவில்லை. எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது. அதன் பின்னர், இருவரும் பேசத் தொடங்கினோம். நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட விஷயங்களை யாரிடமும் சொல்ல முடியாது' என்று சிவாஜி கூறினார். இதைத் தொடர்ந்து, எதற்காக உங்கள் இருவருக்கும் இடையே வெறுப்பு மற்றும் சண்டை இருப்பதாக மக்கள் பேசுகிறார்கள் என சிவாஜியிடம் நான் கேள்வி எழுப்பினேன்.
இதைக் கேட்ட சிவாஜி, 'சிறு வயதில் சென்னைக்கு வந்து நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் சாப்பிட்ட இடமே எம்.ஜி.ஆர் வீடு தான். நாடகம் முடிந்த பின்னர், எம்.ஜி.ஆர் வீட்டில் தான் இரவு சாப்பிடுவேன். அந்த நேரத்தில் நான் நாடகத்தை முடித்து திரும்புவதற்கு தாமதம் ஆகும். அப்போது, எம்.ஜி.ஆர் பசிக்கிறது என்று கூறினாலும், நான் வரும் வரை காத்திருக்குமாறு எம்.ஜி.ஆரின் தாயார் கூறுவார். மேலும், நான் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு வந்த பின்னர், எனக்கு சாப்பாடு பரிமாறிய பின்னர் தான், எம்.ஜி.ஆருக்கு சாப்பாடு கொடுப்பார்கள்' என சிவாஜி கணேசன் கூறினார்" என்று பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
உச்ச நட்சத்திரங்களாக சினிமாவில் விளங்கிய இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்திருந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எப்படி உருவானது என்றும், அதனை இறுதிவரை இருவரும் எவ்வாறு சரியாக பார்த்துக் கொண்டார்கள் என்றும் இந்த சம்பவங்கள் மூலம் ரசிகர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.