/indian-express-tamil/media/media_files/2025/07/25/annamalai-movie-2025-07-25-12-54-18.jpg)
'அண்ணாமலை' திரைப்படம் குறித்து தனது கருத்துகளை ரஜினிகாந்திடம் பகிர்ந்து கொண்ட தருணத்தை நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். சினிமா ஊடகவியலாளர் சித்ரா லட்சுமணன் உடனான நேர்காணலின் போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் பட்டியலில் நடிகர் மணிகண்டன் நம்பிக்கையான இடத்தை பெறுகிறார். நடிப்பு மட்டுமின்றி மிமிக்ரி ஆர்டிஸ்ட், டப்பிங் கலைஞர், வசனகர்த்தா, இயக்குநர் என்று பன்முக திறமையாளராக மணிகண்டன் வலம் வருகிறார். 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் அடையாளம் பெற்ற மணிகண்டன், 'காதலும் கடந்து போகும்', 'விக்ரம் வேதா' போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் இயக்கிய 'நரை எழுதும் சுயசரிதம்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது மட்டுமின்றி 'ஜெய் பீம்' திரைப்படம் இவருக்கு பெரும் புகழை தேடிக் கொடுத்தது. மேலும், 'குட் நைட்', 'குடும்பஸ்தன்' போன்ற படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இந்நிலையில், 'காலா' திரைப்படத்தின் போது நடிகர் ரஜினிகாந்துடன் ஏற்பட்ட ஒரு உரையாடலை அவர் நினைவு கூர்ந்தார்.
அதன்படி, "நடிகர் ரஜினிகாந்த், தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்களிடம், தனது திரைப்படங்கள் குறித்து படப்பிடிப்பு தளங்களில் கேட்பார். அந்த வகையில், அவருடன் பணியாற்றிய தருணத்தில் இதே கேள்வியை எங்களிடமும் கேட்டார். அப்போது, எல்லோரும் 'பாட்ஷா' திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினர். ஆனால், நான் 'அண்ணாமலை' திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினேன். இதைக் கேட்ட ரஜினிகாந்த், ஏன் என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது, 'பாட்ஷா' திரைப்படத்தில் எதிரியை வீழ்த்தி விட்டால் கதை முடிந்து விடும். ஆனால், 'அண்ணாமலை' திரைப்படத்தில் எதிராளியாக நிற்பதே நண்பன் தான். தனது நண்பனுக்கு எதிராக இருந்ததற்கு அண்ணாமலை கேவலப்படுகிறான். அப்படி பார்க்கும் போது தன்னுடைய சபதத்தில் வெற்றிபெற்ற பின்னர், வீட்டு பத்திரத்தை மீண்டும் நண்பனிடமே கொடுக்க சொன்ன போது, அண்ணாமலை கதாபாத்திரம் உயரிய இடத்தை பெறுகிறது என்று பதிலளித்தேன். இந்த பதிலை ரஜினிகாந்த் மிகவும் ரசித்து கேட்டார்" என நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.