நடிகர் மனோபாலா யதார்த்தமாக ஒரு செல்ஃபி போட்டோவை ட்விட்டரில் பதிவிட எதைப்பார்த்தாலும் அக்கப்போர் செய்யும் நெட்டிசன்கள் அவரை பதற வைத்துவிட்டனர். ஒரு செல்ஃபி போட்டது குத்தமா அதுக்கு இப்படியா என்று நிலைமை வடிவேலு காமெடி அளவுக்கு போய்விட்டது.
தமிழ் சினிமாவில் ஆகாய கங்கை, ஊர் காவலன், வெற்றி படிகள், மல்லுவேட்டி மைனர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மனோபாலா. சினிமா இயக்குவதற்கு வாய்ப்புகள் குறைந்த பிறகு, சினிமாக்களில் நடிக்கத் தொடங்கிய நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலிலும் நடித்து வருகிறார்.
நடிகர் மனோபால, சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பார். சினிமா பிரபலங்கள் மறைவின்போது இரங்கல் தெரிவிப்பார்.
பொதுவாக எல்லோருக்குமே ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக ஆகிய சமூக ஊடகங்களில் ஒரு செல்ஃபி புகைப்படம் பதிவிடலாம் என்ற ஒரு ஆசை எழும். அப்படி நகைச்சுவை நடிகர் மனோபாலா யதார்த்தமாக ஒரு செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பு எதுவும் இல்லாமல் பதிவிட்டார்.
மனோபாலா இந்த செல்ஃபி புகைப்படத்தில் பார்ப்பதற்கு சற்று சோர்வாகவும் படுக்கையில் இருப்பது போன்று தோற்றம் தருகிறது. மனோபலாவின் புகைப்படத்தை பார்த்த ஒரு நெட்டிசன் ‘ஓ….’ என்று அழுது வைத்தார். இதைப் பார்த்த நெட்டிசன் எப்படி இருக்கீங்க சார் என்று நலம் விசாரித்தார்.
இதைவிட இன்னொரு அக்கப்போர் அரங்கேறியது. சில நெட்டிசன்கள் சூர்யா ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் தகாத வார்த்தைகளைக் கூறி சர்ச்சையில் ஈடுபட்டனர். ஒரு தனுஷ் படத்தின் அப்டேட் எப்போ என்று கேட்டு டேக் செய்கிறார். மனோபாலாவின் செல்ஃபி புகைப்படத்தை தொடர்ந்து பதிவிட்ட நெட்டிசன்களின் கம்மெண்ட்டுகளைப் பார்க்கிற எவரும் அங்கே ஏதோ ஒரு மிகப்பெரிய தெருச்சண்டை நடந்திருப்பதைப் பார்க்க முடியும்.
தனது செல்ஃபி போட்டோவை வைத்து நெட்டிசன்கள் செய்த ரகளையைப் பார்த்து பதறிப்போன மனோபாலா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒரு பதிவு போட்டு முடித்து வைத்தார். இது குறித்து மனோ பாலா தனது ட்விட்டரில், “என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..” என்று பதிவிட்டார்.
ஆனாலும், அந்த அக்கப்போர் முடிந்ததாகத் தெரியவில்லை. தானாகத் தனிந்தால்தான் உண்டு. இதைப் பார்த்த ஒரு நெட்டிசன், “இதுக்குத்தான் ஒன்னு pose ஒழுங்கா கொடுக்கணும், இல்ல Caption ஆச்சும் போடணும்” என்று கம்மெண்ட் செய்தார். இதை ஆமோதித்த மனோபாலா ‘ஆமா, ஆமா’ சொல்லியுள்ளார்.
மனோபாலாவின் செல்ஃபி புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் செய்த ரகளையைப் பார்க்கும் எவரும், “ஒரு மனுஷன் ஒரு செல்ஃபி போட்டது குத்தமாயா? அதுக்கு இப்படியா?” என்று வடிவேலும் காமெடி டயலாக்கைத்தான் கூறுவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"