ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்தபோது, ரஜினிகாந்த் நடத்துனராக இருந்தபோதே யாரும் நடிக்க விரும்பாத கேரக்டரில் நடித்து அசத்திய நினைவுகளை ரஜினி தன்னிடம் பகிர்ந்து கொண்டதை நடிகர் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக சிம்மான்சனமிட்டு அமர்ந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். இன்றைக்கும் வசூல் வேட்டையில் ரஜினி படங்கள் சோடை போனதில்லை. அவருடைய தோல்வி படங்கள் என்று சொல்லப்படும் படங்களின் வசூல்கூட முன்னணி ஹீரோக்களின் வெற்றிப் படங்களின் வசூலுக்கு நிகராக இருக்கும்.
அதனால்தான், தமிழ் சினிமாவில் இன்றைக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் இடையே போட்டி நிலவுகிறது.
ஆனால், ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளியான சில படங்கள் எதிர்பார்க்கப்பட்ட வசூலைக் குவிக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான தர்பார் படம் சறுக்கியது. அடுத்து, அஜித்துக்கு மெகா ஹிட்டுகளை கொடுத்த சிறுத்தை சிவாவுடன் இணைந்தார். இருவரும் இணைந்து பணியாற்றிய அண்ணாத்த படமும் தோல்வி அடைந்தது. இதனால், கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற சூழலில் ரஜினி இருக்கிறார்.
இதனால், ரஜினிகாந்த் இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமாருடன் இணைந்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் ட்ரோல் செய்யப்பட்டாலும் அவர் ஒரு திறமையான இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஜினியும், நெல்சனும் இணைந்திருக்கும் ஜெயிலர் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் தவிர தமன்னா, மாரிமுத்து உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்து, படப்பிடிப்புக்குப் பிறகான படத் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தபோது, போடப்பட்ட ஒரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத கேரக்டரில் நடித்து அசத்திய மலரும் நினைவுகளை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அந்த நாடகத்தில் பீஷ்மராக நடிக்க யாருமே வராததால், அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக அமர்ந்து தனது பிராண்டட் ஸ்டைல் சிரிப்பை சிரித்திருக்கிறார். ரஜினியின் நடிப்பைப் பார்த்து உற்சாகம் அடைந்த அனைவரையும் கைத்தட்டி ரசித்தார்கள்” என ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராகவும், வைரமுத்துவிடம் உதவியாளராகவும் இருந்தவர். சில படங்களை இயக்கியிருக்கும் மாரிமுத்து தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"