/indian-express-tamil/media/media_files/2025/09/05/mayilsamy-2025-09-05-15-37-56.jpg)
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி, நடிகர் எம்.ஜி.ஆரைப் போலவே உதவும் குணம் கொண்டவர். நடிகர் விவேக் ஒரு மேடை நிகழ்ச்சியில், "தன்னிடம் உள்ள அனைத்தையும் பிறருக்கு கொடுத்துவிட்டு, பிறகு தன் செலவுக்குப் பணம் கேட்பார்" என மயில்சாமியின் உதவும் மனப்பான்மையை பற்றி மனம் நெகிழ்ந்துப் பேசியிருந்தார். மயில்சாமி 1984 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய 'தாவணி கனவுகள்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தூள், கில்லி, காதல் தேசம், சிவகாசி போன்ற பல படங்களில் இவரது நகைச்சுவைப் பாத்திரங்கள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.
தற்போது, நடிகை தீபா, மயில்சாமியின் உதவும் குணம் குறித்து முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். 'மெட்டி ஒலி' தொடர் மூலம் அறிமுகமான தீபா, 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார். கிராமத்து தோற்றத்தாலும் வெகுளியான பேச்சாலும் ரசிகர்களைக் கவர்ந்த அவர், 'கடைக்குட்டி சிங்கம்', 'டாக்டர்', 'இந்தியன் 2' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு திரைக்கு வந்த ராஜாகிளி படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் உருவான மெட்ராஸ்காரன் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் மயில்சாமியுடன் இணைந்து நடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி தீபா பேசினார். தனது மகனுக்கு இதயத்தில் ஒரு பிரச்னை வந்தபோது, அந்தத் தகவல் எப்படியோ மயில்சாமிக்குத் தெரியவந்துள்ளது. உடனே போன் செய்து, "எவ்வளவு பணம் தேவைப்படும்?" என்று கேட்டாராம். இது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தீபா கூறினார்.
"இந்தக் காலத்தில் உறவினர்கள்கூட உதவி செய்யத் தயங்குவார்கள். ஆனால், நான் கேட்காமலேயே எனக்கு உதவி செய்ய முன்வந்த மயில்சாமிதான் எனக்குக் கிடைத்த சாமி" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்த மயில்சாமி, கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலமானார். அவர் ஒரு தீவிரமான சிவ பக்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.