தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என அந்தந்த காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக சிலர் விளங்குவார்கள். இவர்கள் எல்லோருக்கும் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பார்கள் என்பது நிதர்சனம். மேலும், இவர்களுடைய படத்திற்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனும் உயர்வாக இருக்கும். ஆனால், இவ்வாறு உச்ச நட்சத்திரங்களை கடந்து மற்ற சில முக்கிய நடிகர்களும் சினிமாவில் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள்.
Advertisment
அந்த வரிசையில் நடிகர் மைக் மோகனை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அன்றைய காலகட்டத்தில் கமல்ஹாசனுக்கு ஏராளமான ரசிகைகள் இருந்தனர் என்பது எல்லோரும் அறிந்தது தான். அந்த வகையில், கமல்ஹாசனுக்கு இணையாக மைக் மோகனுக்கும் கணிசமான அளவிற்கு ரசிகைகள் இருந்தனர். அந்த அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மைக் மோகன் நடித்துள்ளார்.
இவரது திரைப்படங்கள் ஹிட்டாவதை காட்டிலும், அதில் இடம்பெற்ற பாடல்கள் கூடுதல் கவனம் பெறும். இதற்கு உதாரணமாக, மூடு பனி, நெஞ்சத்தை கிள்ளாதே, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், 24 மணி நேரம், உதய கீதம், இதய கோவில் என ஏராளமான படங்களை கூறலாம்.
ஆனால், இளையராஜாவின் இசையால் தான் மைக் மோகன் திரைப்படங்கள் ஹிட்டாகின என்ற ஒரு கருத்து நிலவியது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நடிகர் மைக் மோகன் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, "ஒரு திரைப்படத்திற்கு பாடல்கள் மிக முக்கியமானவை. இதேபோல், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் தான் திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. எனினும், திரைப்படம் ஹிட்டான பின்பு, அதில் இடம்பெற்ற பாடல்களுக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கும்.
என்னுடைய திரைப்படங்களும் அதிக அளவில் வெற்றி பெற்றதால், அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்திற்கும் கூடுதல் கவனம் கிடைத்தது. இதற்காக எனது படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர்களுக்கு நன்றி கூற வேண்டும். இசைக்கு கடவுள் போன்று இளையராஜா விளங்குகிறார். அவரை தவிர கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், சிவாஜி ராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் பங்கும் இதில் இருக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் நன்றி கூற வேண்டும்" என நடிகர் மைக் மோகன் தெரிவித்துள்ளார்.