நடிகர் மைக் மோகன் ரீ-என்டரி படமாக தயாராகி வரும் ஹரா படத்தில் முதலில் நடிகை குஷ்பு நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலான நடிகை அனுமோல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என்று போற்றப்படும் நடிகர் மோகன். மைக் மோகன் என்று அழைக்கப்படும் இவர் படத்தில் மை பிடித்து பாடல் பாடும் காட்சி வந்தாலே அந்த படம் வெற்றிதான் என்று நினைக்கும் அளவுக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். பாலு மகேந்திரா இயக்கத்தில் 1977-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மோகன்.
தொடர்ந்து மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மோகன், பயணங்கள் முடிவதில்லை, 100வது நாள், இதய கோவில், மௌனராகம், ரெட்டைவால் குருவி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இவருக்கான வாய்ப்பு குறைந்தபோது, அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு தமிழில் சுட்டபழம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது ஹரா என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்துள்ளார்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் நடிகை குஷ்பு நாயகியாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் மோகன் – குஷ்பு ஜோடி முதல்முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படடது. ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து குஷ்பு விலகியதாகவும், அவருக்கு பதிலாக நடிகை அனுமோல் நாகியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் முடிவதில் ஏற்பட்ட தாமதமே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், "துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் ஒரு விபத்தை சந்தித்தேன், அதனால் நாங்கள் படத்தின் ஷெடியூலை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மோகன் சார் முழுவதும் மிகவும் உறுதுணையாக இருந்து இந்த பின்னடைவில் இருந்து மீண்டு வர எனக்கு உதவினார். தேதி பிரச்சனையால் குஷ்பு மேடம் காட்சிகளை படமாக்க முடியவில்லை. அதனால் அவருக்கு பதிலாக நடிக்க நாங்கள் அனுமோலை அணுகினோம், இப்போது அவர் படத்தில் மோகனின் மனைவியாக நடிக்கிறார், அதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
தளபதி விஜய்யின் படத்திற்கான மோகனின் ஷெட்யூலுக்கு முன்பே அவரது காட்சிகளை முடித்துவிட்டோம். "ஹாரா படப்பிடிப்பிற்குப் பிறகு தளபதி படத்தில் மோகன் சார் ஒப்பந்தம் செய்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவரது பாத்திரம் சக்திவாய்ந்ததாக இருக்கும்." ஹாரா, ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சாருஹாசன், அனித்ரா நாயர், சுரேஷ் மேனன், வனிதா விஜய் குமார், மைம் கோபி, ஆதவா ஜெய்க்குமா, தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“