/indian-express-tamil/media/media_files/2025/08/17/mohan-vaidya-2025-08-17-16-20-59.jpg)
ஆடிஷன் கூப்பிட்டு ஏமாத்துறாங்க; நான் சென்னை விட்டே போறேன்; கடும் மன உளைச்சலில் எதிர்நீச்சல் நடிகர் திடீர் முடிவு!
பிரபல இசைக் கலைஞரும், நடிகருமான மோகன் வைத்யா, சமீபத்தில் கலாட்டா பிங்க் யூடியூப் சேனலில் நடத்தப்பட்ட நேர்க்காணலில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, நடிப்புத் துறையில் சந்தித்த ஏமாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மன உளைச்சல் காரணமாக சென்னை விட்டு விலகிச் செல்ல முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி விபத்தில் இறந்த பிறகு, அவர் அடைந்த ஆழ்ந்த துயரத்தையும், அதை சமாளிப்பதில் உள்ள சிரமத்தையும் மோகன் வைத்யா பகிர்ந்து கொண்டார். என் மனைவியுடன் கழித்த ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு இன்றும் நினைவில் உள்ளது. அவளை அலங்கரிப்பது, கூந்தல் கோதி விடுவது, பூ வைப்பது போன்ற சிறிய விஷயங்கள் கூட நினைவில் பசுமையாக உள்ளதாகத் தெரிவித்தார். அவரது நினைவுகள் நிறைந்த வாழ்க்கையில் மற்றொருவரை இணைப்பது நியாயமில்லை என்பதால், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றும் மோகன் வைத்யா கூறினார்.
தனது மகனை சார்ந்து வாழ விரும்பவில்லை என்றும், தனித்து வாழ்வதையே விரும்புவதாகவும் கூறினார். நடிப்புத் துறையில் எதிர்கொண்ட ஏமாற்றங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசினார். பலமுறை ஆடிஷனுக்கு அழைத்து, பின்னர் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் புறக்கணித்த சம்பவங்கள் அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. இந்த தொழில்முறை அற்ற தன்மை தன்னை மிகவும் பாதித்ததாக அவர் கூறினார்.
நடிப்புத் துறையில் ஏற்பட்ட இந்த எதிர்மறை அனுபவங்கள் காரணமாக, மோகன் வைத்யா திடீர் முடிவை எடுத்துள்ளார். நடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டு, மீண்டும் தனது இசைப்பயணத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். சென்னையில் இருந்தால் மீண்டும் நடிப்பு வாய்ப்புகளைத் தேடும் எண்ணம் வரும் என்பதால், சென்னையிலிருந்து வெளியேறி வேறு ஒரு இடத்தில் தனது இசைப் பள்ளியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற எதிர்நீச்சல் சீரியலில், தனது கதாபாத்திரம் திடீரென இறந்துபோனது குறித்துப் பேசினார். தனது கதாபாத்திரம் இறக்கப் போவது குறித்து இயக்குநர் தன்னிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறினார். டப்பிங் ஸ்டுடியோவில் ஸ்கிரிப்டைப் பார்த்தபோதுதான் தனக்கு இந்த உண்மை தெரியவந்ததாகவும், இதனால் தான் முதலில் மிகவும் வருத்தமடைந்ததாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், தனது உணர்திறன் காரணமாக, இயக்குநர் தன்னை வருத்தப்பட வைக்க விரும்பவில்லை என்பதைப் பின்னர் புரிந்து கொண்டதாகத் தெரிவித்தார். தனது வாழ்க்கை மற்றும் தொழில்முறை அனுபவங்களை நேர்மையாகப் பகிர்ந்து கொண்ட மோகன் வைத்யா, தான் இறந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகள் குறித்தும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.