பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 69.
கொரோன வைரஸ் தொற்றுநோய் காலங்களில் பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தது சினிமா துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் கடந்த மாதம் மாரடைப்பால் காலமானார். அவரையடுத்து, நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரையடுத்து, பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களின் அடுத்தடுத்த மரணங்களால் தமிழ் சினிமா உலகமும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலி அருகே பனங்குடியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மே11ம் தேதி மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். நகைச்சுவை நடிகர் நெல்லை சிவாவின் மறைவு தமிழ் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வழக்கில் பேசி தனது நகைச்சுவையால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா முதன் முதலில் இயக்குநர் பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தனது நெல்லை பேச்சு வழக்கின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த நெல்லை சிவா, வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி, அன்பே சிவம், தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நெல்லை சிவா நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த ‘கிணத்த காணோம்’ என்ற காமெடி காட்சி இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அதே போல, தலைநகரம் படத்தில், வடிவேலு ‘நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்…” என்று போலீஸ் ஜீப்பில் ஏறும்போது, வடிவேலுவை “நீ யார்ரா? பூச்சாண்டி…” என்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. நெல்லை சிவா, இறப்பதற்கு முன்பு கடைசியாக ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் நடித்திருந்தார். அவர் சினிமாவில் மட்டுமல்லாமல், சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சூழலில்தான், நெல்லை சிவா மாரடைப்பால் காலமாகியுள்ளார். நகைச்சுவை நடிகர் நெல்லை சிவாவின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகம் நகைச்சுவை நடிகர் விவேக், நகைச்சுவை நடிகர் பாண்டு, இயக்குநர் கே.வி.ஆனந்த், நெல்லை சிவா ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்களால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”